»   »  வந்தனாவை வெளியேற்ற ஸ்ரீகாந்த்துக்குத் தடை

வந்தனாவை வெளியேற்ற ஸ்ரீகாந்த்துக்குத் தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் ஸ்ரீகாந்த்தின் வீட்டில் தங்கியுள்ள அவரது மனைவி வந்தனாவை வெளியேற்றக் கூடாது. அவர் தங்கியிருப்பதற்கு ஸ்ரீகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் குறுக்கீடு செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த்தை காக்கிநாடாவில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்ட வந்தனா, ஸ்ரீகாந்த் வீட்டில் கடந்த மாதம் 13ம் தேதி அதிரடியாக குடியேறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த் மற்றும் அவரது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தன்னை ஸ்ரீகாந்த் வீட்டிலிருந்து வெளியேற்ற முயற்சிகள் நடப்பதாகவும் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வந்தனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியம் இன்று தீர்ப்பளித்தார். அதில், வந்தனாவை மணந்து கொண்டதை ஸ்ரீகாந்த்தே ஒத்துக் கொண்டுள்ளார். எனவே ஸ்ரீகாந்த் வீட்டில் வசிக்க வந்தனாவுக்கு உரிமை உள்ளது.

மேலும், குடும்பப் பெண்கள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வந்தனா, ஸ்ரீகாந்த் வீட்டில் வசிக்கவும் உரிமை உள்ளது. எனவே வந்தனாவை ஸ்ரீகாந்த் வீட்டிலிருந்து வெளியேற்றக் கூடாது.

வந்தனா தொடர்ந்து தங்கியிருப்பதற்கு ஸ்ரீகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் குறுக்கீடு செய்யக் கூடாது என்று அதிரடித் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil