»   »  3 மாதம் குடும்பம் நடத்திய ஸ்ரீகாந்த்-வந்தனா

3 மாதம் குடும்பம் நடத்திய ஸ்ரீகாந்த்-வந்தனா

Subscribe to Oneindia Tamil

நடிகர் ஸ்ரீகாந்த் என்னுடன் 3 மாதங்கள் குடும்பம் நடத்தினார் என அவரது மனைவி வந்தனா போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீகாந்தின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த வந்தனா, எனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நடந்து விட்டதாக சொல்லி அதற்கு ஆதராமாக புகைப்படங்களை காட்டினார்.

வந்தனா தங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஸ்ரீகாந்த குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். வந்தனா இன்று வரை ஸ்ரீகாந்த் வீட்டில்தான் இருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் தந்தை, அத்துமீறி எங்கள் வீட்டிற்குள் நுழைந்த வந்தனாவை வெளியேற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, கணவர் வீட்டிலிருந்து மனைவியை வெளியேற்ற உத்தரவிடமுடியாது என சொல்லி, வந்தனாவை தொடர்ந்து ஸ்ரீகாந்த் வீட்டில் வசிக்க அனுமதித்தார்.

இந் நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் தான் தாக்கல் செய்த விவகாரத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்த பிரச்சினை தொடர்பாக வடபழனி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயோலா பாய் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்தும், வந்தனாவும் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்தனர். இதில் வந்தனா சில தகவல்களை போலீசில் வாக்குமூலமாக சொல்லியுள்ளார்.

தனது வாக்குமூலத்தில் வந்தனா கூறியிருப்பதாவது,

பிறந்தநாள் விழாவில் சந்திப்பு:

எனது பிறந்தநாளை அடையாறு ஸ்டார் ஹோட்டலில், எனது தோழிகள் மற்றும் சில நடிகைகளுடன் கொண்டாடினேன். அப்போது அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகை (திரி நடிகை) ஒருவருடன் நடிகர் ஸ்ரீகாந்த் பார்ட்டிக்கு வந்தார். அவரை நடிகை தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்பிறகு கிண்டியில் இருக்கும் ராயல் லீ மெரீடியன் ஹோட்டலில் நடந்த ஸ்ரீகாந்த் பிறந்தநாள் விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. அதில் நான் கலந்து கொண்டேன். அப்போது எங்களுக்குள்ளான நெருக்கம் அதிகமானது. தொடர்ந்து பழகினோம். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்றார்.

ஆனால் அதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நண்பர்களாகவே இருந்து வந்தோம். எங்கள் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

கீதா முன்னிலையில் திருமணம்:

அப்போது ஸ்ரீகாந்த் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர் கோடீஸ்வரராவின் மனைவி கீதாவுடன் ஸ்ரீகாந்துக்கு பழக்கம் ஏற்பட்டது.கீதாவிடம் தன் காதல் விவகாரத்தை சொல்லி சேர்த்து வைக்கும்படி கேட்டார் ஸ்ரீகாந்த்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், கீதாவின் குடும்ப ஜோதிடரான கேதார்ஈசுவர ராவை சந்திக்க காக்கிநாடாவுக்கு நானும், ஸ்ரீகாந்தும், கீதா சென்றோம். அப்போது ஸ்ரீகாந்த் திடீரென அங்கு வைத்து கல்யாணம் செய்து கொள்வோம் என்றார்.

இதையடுத்து நான் எனது பெற்றோரை அங்கு வரச் சொன்னேன். அவர்கள் வந்த ஜோதிடர் முன்னிலையில், அங்குள்ள வேணுகோபால்சாமி கோவிலில் வைத்து எனக்கு ஸ்ரீகாந்த் தாலி கட்டினார். எங்கள் திருமணத்தை ஹைதராபாத்தில் பதிவு செய்தோம்.

3 மாதம் நடந்த தாம்பத்யம்:

திருமணம் முடிந்து நான் சென்னையில் எனது வீட்டில் இருந்தாலும், ஸ்ரீகாந்த் அடிக்கடி வருவார். நேரம் காலம் பார்க்கால் எனது அறையிலேயே எங்களது தாம்பத்திய வாழ்க்கை நடந்தது.

நாங்கள் இருவரும் 3 மாதங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம்.

ஷூட்டிங்கில் இருக்கும்போது பகலில் கூட பெர்மிஷன் போட்டு விட்டு, என்னை பார்க்க ஓடி வந்துள்ளார். இரவில் வந்தால் தனது அப்பா, அம்மாவுக்கு சந்தேகம் வந்துவிடும் என்றார்.

அபாண்ட பழி சுமத்தல்:

இதற்கிடையில் ஒருவழியாக அவரது பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நிச்சயம் செய்ய தேதி குறிக்கப்பட்டது. திருமணத்திற்கு அழைப்பிதழ், திருமண மண்டபம், நகைகள் என எல்லாம் தயார் நிலையில் இருக்க, திடீரென என் மேல் வழக்கு இருப்பதாக காரணத்தை சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என அலைந்து எனக்கும், ஸ்ரீகாந்துக்கும் அலுத்துப் போய்விட்டது. என்னுடைய உடல்நிலையும் மோசமடைந்து வருகிறது. அவருக்காக உடலை கொடுத்த நான், உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று போலீசாரிடம் கூறியுள்ளார் வந்தனா.

விரைவில் முறைப்படி கல்யாணம்:

இதற்கிடையே வந்தனாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன், ஸ்ரீகாந்த் செல்போனில் பேசி ஆறுதல் சொன்னதாகவும் , சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியதாகவும் தெரிகிறது.

வந்தனா விவகாரத்தால், ஸ்ரீகாந்தின் இமேஜ் பாழ்பட்டுள்ளது. இதனால் சினிமா வாய்ப்புகளும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வந்தனாவை விரைவில் ஸ்ரீகாந்த் முறைப்படி திருமணம் செய்து கொள்வார் என்கிறார்கள்.

நல்லது நடந்தா சரி...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil