»   »  வந்தனாவுடன் செட்டிலாகிறார் ஸ்ரீகாந்த்

வந்தனாவுடன் செட்டிலாகிறார் ஸ்ரீகாந்த்

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக வந்தனாவை தனது மனைவியாக ஏற்றுக் கொண்டு செட்டிலாகி விட முடிவு செய்து விட்டார் ஸ்ரீகாந்த்.

நடிகர் ஸ்ரீகாந்த்தும், வந்தனாவும் கடந்த ஆண்டு ஸ்ரீகாந்த் பெற்றோருக்குத் தெரியாமல், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வைத்து ரகசியக் கல்யாணம் செய்து கொண்டனர். திருமணத்தையும் அங்குள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

அதன் பின்னர் ஸ்ரீகாந்த் தனது வீட்டினரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு அங்கீகாரம் வாங்கினார். மேலும் வெளியுலகுக்காக ஒரு திருமணத்தையும் ஸ்ரீகாந்த் வீட்டினர் அறிவித்தனர். இந்த 2வது திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் மார்ச் 9ம் தேதி நடந்தது.

இந்த நிலையில்தான் வந்தனா குடும்பத்தினர் மீது குண்டக்க மண்டக்க கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கல்யாணத்தை நிறுத்தி வைக்க ஸ்ரீகாந்த் குடும்பம் தீர்மானித்தது.

பல்வேறு வழியில் ஸ்ரீகாந்த் குடும்பத்தினருடன் வந்தனா தரப்பு சமரசம் பேசி வந்தது. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இதையடுத்து 2 மாதங்களுக்கு முன்பு வந்தனா அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டில் குடியேறினார்.

இதை எதிர்பார்க்காத ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் போட்டது போட்டபடி வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

தனக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் ஏற்கனவே கல்யாணமாகி விட்டதாக அறிவித்த வந்தனா, அதுதொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் கடுப்பான ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் வந்தனா அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்திருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் முறைப்படி இருவருக்கும் கல்யாணமாகியுள்ளதால் வந்தனாவை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது என்று கோர்ட்டும், சென்னை காவல்துறையும் ெதரிவித்து விட்டன.

இந்த நிலையில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார் ஸ்ரீகாந்த். இப்படியாக இரு தரப்பும் நீதிமன்றம், வழக்கு, வாய்தா என அலைந்து கொண்டிருந்தது.

பிரச்சினையை பேசித் தீர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு ஸ்ரீகாந்த் தரப்பு வந்தது. இதையடுத்து வந்தனாவை தனது மனைவியாக ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்த ஸ்ரீகாந்த் தீர்மானித்துள்ளாராம். இதற்கு ஸ்ரீகாந்த்தின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தனது வக்கீல் பாண்டியன் முன்னிலையில், வந்தனாவை சந்தித்தார் ஸ்ரீகாந்த். அப்போது நீண்ட நேரம் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர், மனம் விட்டுப் பேசியுள்ளனர்.

இருவரும் சேர்ந்து வாழ்வது என்ற முடிவை வந்தனா தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் ஸ்ரீகாந்த் கூறுகையில், வந்தனாவை எனது மனைவியாக எனது குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் எனது குடும்பத்து உறுப்பினராகவும் அவரை அங்கீகரித்துள்ளனர்.

ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் இந்த முடிவை இந்த வார இறுதியில் முறைப்படி அனைவருக்கும் நான் அறிவிக்கவுள்ளேன்.

இந்தப் போராட்டத்தால் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். எனது திரைப்பட தொழிலும் இதனால் பாழாகி வருவதை உணர்ந்துள்ளேன் என்றார்.

எல்லாப் பிரச்சினைகளும் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளதால், புதுமணத் தம்பதிக்கு சென்னையில் பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஸ்ரீகாந்த் வீட்டினர் ஏற்பாடு செய்யவுள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil