»   »  ரஹ்மானுக்கு புலமைப்பித்தன் எச்சரிக்கை!

ரஹ்மானுக்கு புலமைப்பித்தன் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil
AR Rahman

ரீமிக்ஸ் செய்கிறேன் என்ற பேர்வழியில் பழம்பெரும் பாடல்களை சிதைப்பதை ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பழம்பெரும் பாடலாசிரியரும், அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் எச்சரித்துள்ளார்.

தமிழ் சினிமாக்காரர்களுக்கு கற்பனை வளம் சுத்தமாக வற்றி வாடிப் போய் விட்டதோ என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு சமீப காலமாக ரீமிக்ஸ பாடல்களும், படங்களும் சரமாரியாக வர ஆரம்பித்துள்ளன.

ரீமிக்ஸ் படங்கள் கூட மெது மெதுவாகத்தான் வர ஆரம்பித்துள்ளன. ஆனால் ரீமிக்ஸ் பாடல்கள் தான் வதவதவென வந்து குவிந்து கொண்டுள்ளன.

ஒவ்வொரு படத்திலும் ஒரு பழைய பாடலின் ரீமிக்ஸ் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. ஆனால் ஓரிரு ரீமிக்ஸ் பாடல்கள்தான் ரசிக்கப்பட்டனவே தவிர மற்றவை எல்லாம் ஒரிஜினல் பாடல்களை குத்துயிரும் குலையுருமாக மாற்றிப் போட்டுள்ளதே தவிர ரசிக்க வைக்கவில்லை.

இந்த நிலையில் பழம்பெரும் பாடலாசிரியரும், எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல் எழுதிப் பிரபலமானவரும், அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் ரீமிக்ஸ் பாடல்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

கவியரசு கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி ஆகியோரின் பேட்டைக்குள் கொஞ்ச காலம் புகுந்து விளையாடியவர்தான் புலமைப்பித்தன். பல ரசிப்புக்குரிய பாடல்களைக் கொடுத்தவரும் கூட.

சென்னையில் நேற்று அய்யாவழி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புலமைப்பித்தன் பேசுகையில், ரீமிக்ஸ் கலாச்சாரத்தை ஒரு பிடி பிடித்தார்.

புலமைப்பித்தன் பேசுகையில், அது என்ன ரீமிக்ஸ் பாட்டு. ரீமிக்ஸ் என்ற பெயரில் மாமேதைகளை தயவு செய்து இழிவுபடுத்தாதீர்கள். அப்படிச் செய்பவர்களை கடுமையாக கண்டிக்கிறேன்.

பக்குவமாக செய்த பாயாசத்தை கெடுத்தது போல இருக்கிறது ரீமிக்ஸ் பாடல்கள். ரீமிக்ஸ் என்ற பெயரில் சிவாஜி, டி.எம்.செளந்தரராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோரை மானபங்கப்படுத்தாதீர்கள். அப்படி மானபங்கப்படுத்தினால் நான் போகாத படியேறி போக வேண்டியிருக்கும் (கோர்ட்டுக்கு).

பொன்மகள் வந்தாள் என்ற பாடல், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த அருமையான பாடல். அருணகிரிநாதரின் அருமையான சந்தத்தில் அமைந்த பாடல். அதை புதுமை என்ற பெயரில் கெடுத்துள்ளனர்.

அதேபோல, எங்கேயும், எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என்ற பாடலையும் கெடுத்து விட்டார்கள்.

தூங்குவதற்காகப் பாடுவது தாலாட்டு, நிரந்தரமாக தூங்குவதற்குப் பாடுவது ஒப்பாரி. இதில் ரீமிக்ஸ் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தனது சொந்த ட்யூன்களை எப்படி வேண்டுமானாலும் கெடுத்துக் கொள்ள இசையமைப்பாளர்களுக்கு உரிமை உள்ளது. அதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் பழம்பெரும் நடிகர்கள், இசையமைப்பாளர்களின் பாடல்களை சிதைக்க அவர்களுக்கு உரிமை இல்லை.

தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடலான பூமழை தூவி பாடலை ஒரு படத்தில் ரீமிக்ஸ் செய்வதாக கேள்விப்பட்டேன். அது உண்மையானால் அந்த இசையமைப்பாளருக்கு எதிராக கோர்ட்டுக்குப் போவேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் முதலில் தமிழை சரியாக கற்றுக் கொள்ளட்டும். பிறகு இசைப் பள்ளியை ஆரம்பிக்கட்டும். அதிகமாக ஆடாதீர்கள் என்று ஆவேசமாக பேசினார்.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்துலிங்கம், பாடகர்கள் கே.ஜே.ஏசுதாஸ், ஜானகி, எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். எம்.எஸ்.வி. ஆடியோவை வெளியிட ஏசுதாஸ் பெற்றுக் கொண்டார்.

காமராசு படத்தை இயக்கிய அன்பழகன் இயக்கத்தில், பகவதி சீனிவாசன் இசையமைப்பில் உருவாகியுள்ள அய்யா வழி, ஜனவரி கடைசியில் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும், பாடகி எஸ்.ஜானகி, சம்பளம் கூடப் பெறாமல் ஒரு பாடலைப் பாடிக் கொடுத்தாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil