»   »  விஜய் புறக்கணிப்பு - இணையதளங்கள் முடிவு!

விஜய் புறக்கணிப்பு - இணையதளங்கள் முடிவு!

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய் நடித்த போக்கிரி படத்தின் விழாவுக்கு தங்களை அழைக்காததை கண்டித்து சென்னையிலிருந்து வெளியாகும் சில இணையதளங்களின் பத்திரிக்கையாளர்கள் விஜய் பட புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்த போக்கிரி படம் 175 நாட்களைத் தாண்டியுள்ளது. இதையொட்டி இன்று சென்னையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு இணையதள செய்தியாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது இணையதள செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து வெளியாகும் சில இணையதளங்களின் செய்தியாளர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, இணையதள செய்தியாளர்கள் சார்பில் இனியன் கூறுகையில், நடிகர் விஜய் இணையதளங்களைப் புறக்கணிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்.

அவரது விஜய் ரசிகர்கள்.காம் இணையதளத்திற்கு மட்டுமே அவர் படம் சம்பந்தப்பட்ட செய்திகளை முதலில் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதில் வெளியாகி ஒரு வாரம் கழிந்த பின்னரே பிற இணையதளங்களுக்குக் கொடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது இணையதளங்களை அவமானப்படுத்தும் செயல். இந்த நிலையில் போக்கிரி பட விழாவுக்கு இணையதள செய்தியாளர்கள் யாரையும் அழைக்கவில்லை. இதுகுறித்து விஜய் தரப்பில் கேட்டபோது, இதற்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கூறி விட்டனர்.

படத் தயாரிப்பாளரான கனகரத்னா மூவிஸை அணுகியபோது அழைக்கவில்லை என்றால் அழைக்கவில்லைதான் என்று கூறி விட்டனர்.

எனவே இணையதள செய்தியாளர்கள் அனைவரும் கூடி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

அதன்படி, போக்கிரி படம் தொடர்பான விழாவை நாங்கள் புறக்கணிக்கிறோம். அதுதொடர்பான செய்திகளையும் பிரசுரிக்க மாட்டோம்.

இனிமேல் விஜய் படம் தொடர்பான எந்த செய்தியும் இணையதளங்களில் வெளியாகாது. விஜய் படங்களை முழுமையாக புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம்.

அதேபோல கனகரத்னா மூவிஸ் எதிர்காலத்தில் தயாரிக்கும் படங்களையும் புறக்கணிக்கிறோம். தற்போது அந்த நிறுவனம் தயாரித்து வரும் நம்நாடு (சரத்குமார்தான் ஹீரோ) மற்றும் பெயரிடப்படாத ஒரு படம் ஆகியவை குறித்த எந்த செய்தியும், புகைப்படமும் இணையதளங்களில் வெளியாகாது என்றார் இனியன்.

இணையதளங்களின் செய்தியாளர்கள் எடுத்துள்ள இந்த முடிவு குறித்து விஜய் மற்றும் கனகரத்னா மூவிஸ் தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil