»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil


விஜய் நடித்து சக்கை போடு போட்டு வரும் கில்லி படம் இதுவரை ரூ. 20 கோடி வசூலை அள்ளிவிட்டதாம்.

சில வாங்களில் ஆட்டோகிராப், படையப்பா வசூல்களை இந்தப் படம் முறியடித்துவிடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

மாநிலம் முழுவதும் 100 தியேட்டர்களில் வெள்ளி விழாவையும் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் இப்போதும் பல இடங்களில் ஹவுஸ் புல். இதனால் நிச்சயம் கோல்டன் ஜூப்ளியைத் தொட்டுவிடும் என்கிறார்கள்.

சென்னையில் நான்கே திரையரங்குகளில் கடந்த ஒரு மாதத்தில் கில்லி ஈட்டிய வருவாய் ரூ. 1.06 கோடியாம். வினியோகஸ்தர்கள் வட்டாரத்திலேயே சந்தோஷமாய் வாயைப் பிளக்கிறார்கள். இந்தப் படத்தின் அசாத்திய வெற்றியால் இயக்குனர் தரணியின் மார்க்கெட் படு ஸ்டெடியாகி இருக்கிறது.


நீண்ட நாட்களுக்குப் பின் திருமலை மூலம் கிடைத்த வெற்றியைத் தக்க வைக்க உதவியதோடில்லாமல் படத்தை மெகா ஹிட்டாக்கிய தரணிக்கு ஒரு அட்டகாசமான காரை வாங்கி பரிசளித்திருக்கிறார் விஜய்.

100 நாட்களைத் தொடும்போது வசூல் ரூ. 30 கோடி வரை எட்டும் என்றும் கணக்கிடுகிறார்கள். இதனால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் தயாரிப்பாளர்களின் க்யூ வரிசையும் நீண்டு போய் கிடக்கிறது.

ஆனால், நிதானமாக படங்களைச் செய்வதில் தீவிரமாக இருக்கும் விஜய் இப்போது மதுர படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறார். இதில் மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிக் கடை வைத்திருக்கும் நபராக நடிக்கிறார்.

அடுத்ததாக மதுரை, ராமநாதபுரம் பக்கம் தலையெடுக்கும் அரிவாள்களுக்குப் பேர் போன திருப்பாச்சி கிராமத்தின் பெயரில் உருவாகும் திருப்பாச்சி என்ற படத்தில் நடிக்கிறார்.

மதுர முடியும் வரை யாரிடமும் கை நீட்டி அட்வான்ஸ் வாங்குவதில்லை என்ற முடிவில் இருக்கும் விஜய் தன்னை நாடி வரும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய கும்பிடு போட்டு அனுப்பி வருகிறார்.

இன்றைய நிலவரப்படி விஜய்யின் ரேட் ரூ. 4 கோடி பிளஸ் என்கிறார்கள்.

கில்லியின் மாபெரும் வெற்றிக்கு, கிட்டத்தட்ட ரஜினி ஸ்டைல் காமடி பிளஸ் குடும்பப் படமாக அது அமைந்தது தான் காரணம் என்கிறார் விஜய்.

இந் நிலையில் ஒவ்வொரு ஆண்டும், ஏழை மாணவ மாணவியருக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கி வரும் விஜய், அந்த வகையில் இந்த ஆண்டும் 3 லட்சம் நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

சென்னை வட பழனியில் உள்ள தனக்குச் சொந்தமான ஜே.எஸ். கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் நோட்டுப் புத்தகங்களைத் தந்து ஏழை மாணவிகளுக்கு வழங்கச் சொல்லிக் கொடுத்தார் விஜய்.

அப்போது அவர் பேசுகையில், எனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்ப இஷ்டம். அவர்களுக்கான படம் ஒன்றில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக உள்ளேன். அதே போல இரட்டை வேடத்தில் நடிக்கவும் ஆசை தான். ஆனால் இயக்குநர்கள்தான் அதுபோன்ற கதையை கூற மாட்டேன் என்கிறார்கள்.

நமக்கு அரசியல் தயவு செய்து வேண்டாம். அதுக்கு நான் ஆளே இல்லை, எனவே என்னை விட்டு விடுங்கள் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil