»   »  விவேக்கின் தயாள மனசு!

விவேக்கின் தயாள மனசு!

Subscribe to Oneindia Tamil


சினிமாவில் அட்வைஸ் கொடுப்பதோடு நில்லாமல் நிஜத்திலும் நல்ல மனுக்காரராக நடந்து கொண்டு அசத்தியுள்ளார் 'வைகை இளவல்' விவேக்.

Click here for more images

சின்னக் கலைவாணர் என்ற பதத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் விவேக். வெறுமனே சிரிக்க வைப்பதோடு நில்லாமல் சிந்திக்கவும் வைத்ததில் கலைவாணருக்குப் பிறகு விவேக்குக்குத்தான் அந்தப் பெருமை சேரும்.

சமுதாயத்தில் நிலவும் களைகளான மூட நம்பிக்கைக்கு எதிராக முழு மூச்சோடு சினிமாவில் நகைச்சுவை என்ற ஊடகத்தின் மூலம் பிரசார இயக்கமே நடத்தி வருகிறார் விவேக் என்றால் அது மிகையாகாது.

சினிமாவில் மட்டும் அட்வைஸ் கொடுப்பவராக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் தனது நல்ல மனசை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார் விவேக். அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ. 50 லட்சம் நன்கொடையைக் கொடுத்து புற்று நோயாளிகளுக்கு புது வாழ்வு கொடுக்கும் முயற்சியில் தனது பங்கையும் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த இசை நிகழ்ச்சியின் மூலம் இந்தப் பணம் வசூலிக்கப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர் விவேக்தான்.

இதுகுறித்து விவேக் கூறுகையில், இது ஒரு சாதாரண உதவிதான். நான் பெரிதாக எதையும் செய்து விடவில்லை. ஆனால் அடையார் புற்று நோய்க் கழகம் பல ஆண்டுகளாக பெரும் சேவை செய்து வருகிறது. எதிர்காலத்திலும் இதுபோன்ற உதவிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

சொல்லி அடிப்பேன் படத்திற்குப் பிறகு இன்னொரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம் விவேக். படத்தின் பெயர் கோடம்பாக்கத்தில் பராசக்தி. சொல்லி அடிப்பேன் நவம்பர் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளதாம்.

சொல்லி அடிப்பேன் படத் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்தின் தயாரிப்பில் உருவான பஞ்சு என்ற படம்தான் விவேக்கின் முதல் ஹீரோ படம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. இதையடுத்தே சொல்லி அடிப்பேன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

தனது ஹீரோ அவதாரம் ஏகப்பட்ட சிக்கலைச் சந்தித்ததால் உஷாரான விவேக் தொடர்ந்து காமெடியிலேயே கலக்க முடிவெடுத்தார். தற்போது விஜய்யின் குருவி, விக்ரமின் கந்தசாமி ஆகிய படங்களில் வித்தியாசமான காமெடி வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறாராம்.

சமீபத்தில் வெளியான பசுபதி, மே.பா. ராசக்காபாளையம் படத்தில், விவேக்கின் காமெடி வெகுவாக பாராட்டப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது விவேக்குக்கு சந்தோஷம் தந்துள்ளதாம்.

Read more about: advise, cinema, heroine, vivek

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil