twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி எழுதிய சுயசரிதை இன்னும் வெளியாகாதது ஏன்? - அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்

    By Shankar
    |

    சென்னை: தனது சுயசரிதையின் ஒரு பகுதியை எழுதி முடித்த பிறகும் அதை இன்னும் வெளியிடாமல் உள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    கனடா நாட்டின் 'இயல் விருது' பெற்றதற்காக எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு உயிர்மைப் பதிப்பகம் நடத்திய பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    வந்திருந்த பாமர ரசிகனிலிருந்து மெத்தப் படித்த அறிவு ஜீவிகள் வரை அவரது பேச்சைக் கேட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் ரஜினி பேசியது:

    என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே- இந்த விழாவின் நாயகர் என் நண்பர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களே, அனைவருக்கும் அன்பான வணக்கம்.

    நேற்று என் நண்பர் ஒருவர் என்னைச் சந்தித்தபோது, என்ன ரஜினி காலம் ரொம்ப கெட்டுப் போச்சு... பொய்யெல்லாம் சொல்லிப் பேசுவாங்க... ஆனா பொ்யா போஸ்டர்லாம் அடிக்கிறாங்களே..? ன்னு ஆரம்பிச்சார்.

    அப்படியா என்ன சமாச்சாரம்?ன்னேன்.

    இல்ல... ஏதோ ஒரு எழுத்தாளருக்கு பாராட்டு விழாவாம்... அதுல நீங்க கலந்துக்கறீங்கன்னு போஸ்டர் அடிச்சிருக்காங்க..? ன்னார்.

    இல்லப்பா நான் கலந்துக்கறேன்... ன்னு சொன்னேன் நான். அவருக்கு ஆச்சர்யம்!

    ஆக்சுவலா, எனக்கே இது ஆச்சர்யம். ஒரு எழுத்தாளர் என் நண்பர். அவருக்கு ஒரு பாராட்டு. அதுக்கு நான் வந்து பாராட்டறேன். அதும் இந்த மாதிரி ஒரு சபையில அப்படீங்கறது... எனக்கு சந்தோஷம்... ஆச்சர்யம், அதே நேரம் பயமும்கூட.

    ஏன்னா, இந்த சபையே வந்து... நான் பார்த்த விழாக்களோ இல்ல சபைகளோ இல்ல சந்திச்ச கூட்டங்களோ, அது வேற. ஆனா இங்க எல்லாமே அறிவுஜீவிகள். இங்க உட்கார்ந்த உடனே எஸ் ராமகிருஷ்ணன் வேற சொன்னாங்க. எல்லாருமே பெரிய பெரிய எழுத்தாளர்கள்லாம் வந்திருக்காங்க... மீடியாவிலிருந்து பெரிய பெரிய ஆளுங்கள்லாம் வந்திருக்காங்க. இங்க இருக்கிறவங்க பத்தில்லாம் நான் கேள்விப்பட்டிருக்கேன். இதுக்கப்புறம் என்னமோ லாஸ்ட்ல வந்து பேச சொல்றாங்க... நான் என்னத்தப் பண்ணப்போறேன்...

    பேசும் போது வரும் குழப்பம்...

    அதுல்லாம எனக்கு ஒரு வீக்னஸ் இருக்கு. இந்த பரசுராமர் கர்ணனுக்கு கொடுத்த சாபம் மாதிரி. கர்ணன் வந்து பிராமணன்னு பொய் சொல்லி வித்தைக் கத்துக்கிட்டு, அவன் சத்ரியன் தெரிஞ்சதும், பரசுராமர் கர்ணனுக்கு ஒரு சாபம் கொடுத்துடறார். மிகுந்த நெருக்கடியான நேரத்துல நான் சொல்லிக்கொடுத்த அஸ்திரங்கள் மந்திரங்கள்லாம் மறந்து போகணும் அப்டீன்னு. அந்த மாதிரி எனக்கு ஒரு சபை, மீட்டிங்ல மைக் முன்னாடி நின்னா உனக்கு தெரிஞ்ச தமிழ் வார்த்தைகள் எல்லாம் வரக்கூடாது மறந்துடனும்னு யாரோ சாபம் கொடுத்த மாதிரிதான் எனக்கு ஆயிடறது.

    பேசும்போது என்னன்னு ஒரு குழப்பம்... பல லாங்குவேஜ் வேற தெரியுமா...எந்த லாங்வேஜும் சரியா தெரியாது.. ரொம்ப குழப்பமாயிடும். இது தமிழா தெலுங்கா கன்னடமா என்னான்னு தெரியாது. சரி பொதுவா இங்கிலீஷ்ல அடிச்சி விட்டுடலாம்னு நினைச்சா... அதுல கொஞ்சம் கொஞ்சம் வீக்குதான்... ஹாஹாஹா!

    ஆக, இங்க பேசறவங்கெல்லாம் வந்து, ஒரு சரளமா லாங்குவேஜுக்காக ஒரு விஷயம் இருக்கும்.. அதை வெச்சிப் பேசும்போது, லாங்வேஜ் வந்து ஒரு இடையூறா இருக்காம ப்ளஸ்ஸா இருக்கும். நமக்கு அதுவே மைனஸா இருக்கும் போது, அந்த ப்ளோவே போயிடுது.

    ஏன் இந்தப் பாராட்டு விழா?

    எனி வே... இப்போ ராமகிருஷ்ணன் வந்து எப்படி எனக்கு நண்பரானார் அப்படின்னு சொல்றதுக்கு முன்னால... எனக்கு உடம்பு சரியாகி, மெட்ராஸ் வந்த பிறகு, நிறையப் பேர், நம்ம முத்துராமன் சார் உள்பட, வந்து பார்க்கணும் வந்து பாக்கணுனு சொல்லும்போது, நானே வேண்டாம்னு சொன்னேன். ஏன்னா வீட்லயே உட்கார்ந்து நான் என்ன பண்ணப் போறேன். நானே வர்றேன்னு சொல்லி அவாய்ட் பண்ணேன்.

    நான் குணமடைஞ்ச பிறகு நானே ராமகிருஷ்ணனுக்கு போன் பண்ணேன். அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலிருந்தார். ஒரு முறை ரஷ்யாவில இருக்கேன்னு சொன்னார்.. ஒரு முறை ராமேஸ்வரத்தில் இருக்கேன்னார். அதுக்கப்புறம் ஒரு ஏழுநாளைக்கு முன்னால நான் சென்னையில இருக்கேன்னு சொன்னார். நான் வந்து அவர் வீட்டுக்குப் போய், அவரை பிக்கப் பண்ணிக்கிட்டு, அப்படியே சென்னையையெல்லாம் காரில் ஒரு ரவுண்ட் அடிச்சி, அரசியல், சினிமா, கலை, புத்தகங்கள்லருந்து எல்லா விஷயமும் பேசிட்டு, ராகவந்திரா மடத்துக்குப் போய் சாப்பிட்டுவிட்டு போவது வழக்கம்.

    அப்ப நான் கேட்டேன், இந்த மாதிரி விருது கிடைச்சிருக்காமேன்னு. ஆமா கிடைச்சிருக்குன்னாரு. உடனே வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு, 'இவ்வளவு பெரிய விருது கிடைச்சிருக்கே, யாருக்குமே தெரியலியே அது. எப்டி அது எனக்கு தெரியாம போச்சு... எதுவும் விழா எடுக்கலையா'ன்னு கேட்டேன். 'இல்ல இல்ல ஒண்ணும் பண்ணல.. நீங்க வந்தா செய்யறேன்'னார். நான் சரின்னு சொன்னேன். அப்டிதான் இந்த விழா நடந்தது. இதில் கலந்துகிட்டதில் எனக்கு மிக்க சந்தோஷம்.

    பாபா படப்பிடிப்பின்போது...

    ராமகிருஷ்ணனை எனக்கு பத்து வருஷம் முன்னாடி, அதாவது 2002 லன்னு நெனக்கிறேன். அப்ப வந்து பாபா படம் எடுக்கணும்னு நான் முடிவு பண்ணபோது, நானே அந்தப் படத்துக்கு கதாசிரியர். கதையை நான்தான் எழுதினேன். அதுல வந்து ஒரு சீக்வென்ஸ் இருந்தது... சொர்க்கத்தை காண்பிக்கறது. அப்கோர்ஸ், அது படத்தில இல்ல. எடுக்கல அதை. நரகத்தை வந்து விஷுவலைஸ் பண்ணலாம்... இமாஜின் பண்ணலாம். ஆனா சொர்க்கத்தை எப்படிக் காட்டறது? அது ரொம்ப கஷ்டமா இருந்தது. எழுத்தாளர் சுஜாதாகிட்ட நான் கேட்டேன். ரஜினி அது எனக்கும் கூட கஷ்டமான விஷயம்தான். ஷங்கர் கிட்ட ஒரு பையன் இருக்கான். ராமகிருஷ்ணன்னு சொல்லிட்டு. அவன் ரொம்ப அறிவாளி. நெறைய விஷயம் தெரியும், அவனை நீங்க கான்டாக்ட் பண்ணுங்கன்னார்.

    அதுக்கப்புறம் ஷங்கரை நான் மீட் பண்ணேன். ஷங்கர் சொன்னாங்க, 'ராமகிருஷ்ணனுக்கு ரொம்ப விஷயம் தெரியும் சார். அப்படியே அள்ளி வீசுறாரு. நாமதான் எடுத்துக்கணும்'னாரு. அதன் பிறகு ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்தினார். பேசினேன். அப்படி பேசின பிறகு, அவர் சொன்ன சில விஷயங்கள்லாம் கேட்டு நான் பிரமிச்சுப் போனேன். நான் கேள்விப்படாதது, பார்க்காதது, படிக்காததுன்னு பல விஷயங்களை அவர் சொன்னார். இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சிருக்காரேன்னு நான் ஆச்சர்யப்பட்டேன். அந்த நட்பு அப்படியே ஆழமான பிறகு, ரொம்ப பர்சனலா ஆன பிறகு, அந்த பாபா படம் ரிலீஸ் ஆகி, அதுக்கப்புறம், பாபாவிலருந்து சந்திரமுகி வரைக்கும் அது ஒரு சின்ன காலகட்டம்... என் வாழ்க்கையில அது ஒரு மறக்கமுடியாத காலம்.

    எப்பவும் கஷ்டம் வரும்போதுதான் நிறைய விஷயங்கள் நமக்குத் தெரியும். சந்தோஷமா இருக்கும்போது ஒண்ணுமே தெரியறதில்ல. யோசிக்கிற சக்தியே துன்பங்க்கள் வரும்போதுதான் வரும். மூளைக்கு வந்து வேலை கொடுக்கற மாதிரி.

    ஸோ... பாபாவிலருந்து சந்திரமுகி வரைக்கும் நடந்த சம்பவங்கள், விஷயங்கள் எனக்கே வந்து ஒரு நல்ல அனுபவம்தான். அப்ப வந்து அது கஷ்டமா இருந்தது. ஆனா பின்னாடி, நான் அதை நினைச்சி ரசிக்க ஆரம்பிச்சேன்.

    அதை வந்து ஒரு தொடரா, ஒரு ஆட்டோபயாக்ரபி மாதிரி எழுதுனா எப்படியிருக்கும்னு சொல்லி அவர்கிட்ட கேட்டேன். அவரும் முயற்சி பண்றேன் சார்னார்.

    ஏன்னா.. எனக்கு தமிழ் எழுத தெரியாது (அதாவது புத்தகம் எழுதுகிற அளவுக்கு இலக்கியத் தமிழ்). இங்கிலீஷ்ல அவ்வளவு ப்ளூயன்ஸி கிடையாது. கனடா மறந்து போய்ட்டேன். எழுதறது மறந்து போய்ட்டேன். சரி, ராமகிருஷ்ணன், நான் சொல்றேன். அதை நீங்க எழுதிட்டு வாங்க. கரெக்ஷன் பார்த்துட்டு அந்த புக்கை ரிலீஸ் பண்ணலாம்னு நினைச்சேன். இந்த புக் யாருக்கும் மனசு நோகற மாதிரியில்ல. அதாவது என்னுடைய மனநிலையில எது எப்படி இருந்ததுன்னு சொல்றதுக்காக. யாரையும் தப்பு சொல்றதுக்காக இல்ல.

    திருப்பதில என் நண்பரோட பண்ணை வீட்ல ஒரு பத்துப் பனிரெண்டு நாள் நான் சொல்லி அவர் எழுதி, ஒரு பதினைஞ்சி நாளைக்கப்புறம் அதை என்கிட்ட காண்பிச்சார். மிக அருமையாக வந்திருந்தது.

    ஆனா, உண்மை இருந்ததினால, சில பேருக்கு டெபனிட்லி அது நோகடிக்கும். ஸோ, அதை கண்டிப்பா பேப்பர்ல போட்டு, காண்ட்ராவர்சியாகி, அதுக்கு பதில் சொல்லி... அதனால இப்ப அது வேண்டாம். அதை அப்படியே வெச்சிட்டு, நாம கொஞ்ச நாள் கழிச்சி நேரம் வரும்போது ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டு, அந்த வேலைக்கு அவருக்கு பணம் எவ்வளவு தரலாம்னு கேட்டேன்.

    உடனே அவர் நீங்க எனக்கு பணம் கொடுத்தா அவமானப்படுத்தற மாதிரி. தயவு செஞ்சி இனி அதைப்பத்தி பேசாதீங்கன்னு சொல்லிட்டார்.

    ஹிஸ்டரி என்பது என்ன?

    இப்ப அவர் நல்ல வசதியா இருக்காரு. ஆனா அப்போ அவர் கொஞ்சம் கஷ்டப்படற டைம். அவர் வந்து என்னைப் பாத்து, ரொம்ப ஆச்சர்யப்பட்டாரு. இவ்வளவு பேரு, பணம், புகழ் இருந்தும் எளிமையா இருக்காரேன்னு சொல்லி. நான் அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். வசதி இல்லேன்னாலும் ஒரு குடும்பம் இருந்தும் கூட, அதைப் பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம, எழுத்து எழுத்து எழுத்து, படிக்கிறது எந்த விஷயமா இருந்தாலும் - அவர் கூட நான் திருப்பதி போயிருக்கேன், கர்நாடகா போயிருக்கேன், ஆந்திரா போயிருக்கேன், நிறைய இடங்கள்ல சுத்தியிருக்கேன்.

    அவர் பார்க்கறது.. அந்த த்ருஷ்டி... யதா த்ருஷ்டி ததா சிருஷ்டின்னு சொல்லுவாங்க... கம்ப்ளீட்டா.. ஒருத்தர பாக்கும்போது, ஹிஸ் ஸ்டோரி ஈஸ் எ ஹிஸ்டரி. ஹிஸ்டரின்னா ஹிஸ் ஸ்டோரி. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஹிஸ்டரி இருக்கு.

    ஒருத்தரப் பாக்கும்போது, அவர் தொடர்பான சம்பவங்கள் இப்படி இருக்கலாம்... இவன் ஏன் இப்படி சைலன்டா இருக்கான்... சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கதையா பண்றார். வாழ்க்கையை அப்படியே ரசிக்கிறார், ஒரு மூணு வயசு குழந்தை மாதிரி.

    அந்த 'ஓ' என்கிற ஆச்சர்யமிருக்கே... வயசான பிறகு நமக்கு எல்லாமே மரத்துப்போகுது. இதானே எல்லாமே பாத்துட்டோம்... எல்லாமே தெரிஞ்சிக்கிட்டோம்னு லைப்பே போரடிச்சிப் போகுது. பட், அவுக்கு சின்னச் சின்ன விஷயம் கூட அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அவரால வந்து ரசிக்க முடியுது. அந்த ரசிக்கிறத அப்டியே அழகாக பேனா மூலம் பேப்பரில் எழுத முடிகிறது. இமாஜின் விஷுவலைஸ் பண்ண முடிகிறது. நல்ல விஷயங்களை புதுசு புதுசா தமிழ் மக்களுக்கு கொடுக்கணுங்கற ஆர்வம் இருக்கு.

    தாஸ்தாயேவ்ஸ்கியிருந்து, ஷேக்ஸ்பியரிலிருந்து, ப்ரெஞ்சில் பெரிய பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களையெல்லாம் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கார். எத்தனை பேர் படிச்சிருக்கீங்களோ தெரியாது. நிஜமா சொல்றேன்.. இந்த யங்க்ஸடர்ஸுக்கு அது நல்ல விஷயம்.

    நான் படிக்காதவன்... ஆனா படிச்சவன்!

    நான் எஸ்எஸ்எல்சிதான். அகாடமிக், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேதமேடிக்ஸ் படிச்சதெல்லாம் கம்மிதான். ஆனா எனக்கு படிப்பு ரொம்ப ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்கு. இப்பவும் ஹெல்ப் பண்ணிட்டிருக்கு. கண்டிப்பா இளைஞர்கள் படிக்கணும். இப்ப அந்த புத்தக கண்காட்சியில வருஷா வருஷம் விற்பனை அதிகமாகி, நிறைய பேர் வர்றாங்கன்ணு கேள்விப்பட்டப்போ, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. ரியலி...

    பாட்டில் சத்தமல்ல... புத்தக சத்தம்!

    ஒரு பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி டொமஸ்டிக் ப்ளைட்ல மது அருந்தறது - இப்ப கட் பண்ணிட்டாங்க - இருந்தப்போ, நைட் பத்துமணிக்கு மேல டேக் ஆப் ஆனதும், நீங்க ரிலாக்ஸ் ஆகலாம்னு சொன்ன உடனே, எல்லாம் டக் டக்னு சவுண்ட் வரும். எல்லாம் பாட்டிலு, சோடாதான் எடுப்பாங்க.

    ஏர் ஹோஸ்டஸ்கள் ஐஸ், கிளாஸுன்னு பிஸியா போயிட்டே இருப்பாங்க. அதே பாரின்ல பாத்திங்கன்னா டக் டக்குன்னு சத்தம் வரும்... புத்தகங்களை எடுப்பாங்க. படிக்கிறதுக்கு சிந்திக்கிறதுக்கு புத்தகங்களை எடுப்பாங்க.

    புத்தகங்கள் எப்படின்னா... இப்போ விஷுவலைஸா நீங்க பாத்தீங்கன்னா, ஒரு டைரக்டர் ஒரு பிக்சரை காண்பிக்கிறார்னா, அந்த டைரக்டர் அவர் பார்வையில் அதை எப்படி விஸுவலைஸ் பண்ணாரோ அதைத்தான் நீங்க பார்க்க முடியும். ஆனா, நீங்க விஷுவலைஸ் பண்ண ஆரம்பிச்சிங்கன்னா.. நீங்களே ஒவ்வொரு காட்சியையும் உங்க மனசுக்குள்ள படமாகப் பார்க்க முடியும். படிக்கிறதுல அவ்வளவு சுகம், ஆனந்தம் இருக்கு.

    சுவாமி விவேகானந்தர்

    ஒரே ஒரு ஸ்பீச்.. நரேந்திரன்.. சுவாமி விவேகானந்தா. அவருடைய ஒரே ஒரு ஸ்பீச் அப்படியே உலகத்தையே மாத்திடுச்சி. அதன் பிறகுதான் கல்கத்தாவில் அவருக்கு மரியாதையே வந்தது. எப்படி ரபீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு வந்த பிறகுதான் கல்கத்தாவிலேயே அவரை அடையாளம் கண்டுகொண்டார்களோ அப்படி...

    அந்த மாதிரி இப்ப கனடாவிலிருந்து அவார்ட் கொடுத்திருக்காங்க. நிஜமா மிக மிக சந்தோஷமான விஷயம். ராமகிருஷ்ணனுக்கு இன்னும் வயதிருக்கிறது. இன்னும் அவர் நிறைய எழுதி தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்க வாழ்த்துகிறேன்," என்றார்.

    English summary
    Superstar Rajinikanth's simple but honest speech is the highlight of Writer S Ramakrishnan's felicitation event organised by Manushyaputhiran, a noter poet and publisher.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X