For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மூளையைத் தூக்கி் போடு, மூக்கைச் சிந்தி நல்லா அழு.. முட்டாள் பெட்டியின் முடிவுறா அழுவாச்சி காவியங்கள்

  By Mayura Akilan
  |

  வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்'தானே கேள்விப்பட்டிருக்கிறோம்... அதென்ன அழுவாச்சி காவியம் என்று யோசிக்கிறீர்களா? அதான் தலைப்பின் முன்னாடியே எழுதியிருக்கோமே.. ‘முட்டாள் பெட்டி" பெட்டி பற்றிய "குமுறல் காவியம்"தான் இது.

  நம் வீட்டின் நடுக்கூடாத்தில் இருக்கிறதே ஒரு முட்டாள் பெட்டி அதாங்க டிவி... அதற்கு முட்டாள் பெட்டி என்று பெயர் வைத்தவருக்கு சிலை வைத்து விழா எடுக்கலாம். அறிவுப்பூர்வமாக மக்கள் தெரிந்து கொள்ள எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் அந்த ஒப்பாரி சீரியல்களைத்தான் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர்.

  Effects of Idiot box on South Indian woman

  தமிழில் 30க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன. இதில் இசை சேனல்கள், செய்தி சேனல்களை ஒதுக்கிவிட்டால் பத்துக்கும் மேற்பட்ட சேனல்களில் காலை பத்து மணி முதல் இரவு 11 மணி வரை எந்த சேனலை திருப்பினாலும் சீரியல் மயம்தான். வீட்டுக்காரரையும், குழந்தைகளையும் அனுப்பி வைத்துவிட்டு அக்கடா என்று டிவி பெட்டி முன் உட்கார்ந்து சீரியல் பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர் நம் வீட்டு பெண்மணிகள்.

  நேரடி தமிழ் சீரியல் இல்லையா? இந்தி டப்பிங் சீரியல் அல்லது கொரியன் டப்பிங் சீரியல் ஒளிபரப்பாகிறது. எதை எதை சொல்லக்கூடாதோ அதை எல்லாம் பூக்களும், பிஞ்சுகளும் புரிந்து கொள்ளும் அளவிற்கு விலாவாரியாக சீன் பை சீன் விளக்கி விட்டுத்தான் ஓய்வார்கள்.

  இன்றைய சீரியல்கள் இருதாரத்திற்கு ஆதரவாக கொடி பிடிக்கிறது; இல்லையா? மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணை ஏமாற்றி காதலிப்பது எப்படி? கள்ள உறவுகள்... என மிகப்பெரிய பட்டியலே போடலாம் இன்றைய சீரியலைப் பற்றி... அட அதெல்லாம் பழசு பாஸ்... இப்போ தங்கை உறவு கொண்ட பெண்ணையே... அதுவும் தன்னுடைய மனைவியின் தம்பி மனைவியை மிரட்டி படுக்கைக்கு அழைப்பதுதான் பேஷன் என்கிற ரீதியில் சீரியல்கள் எடுக்கப்படுகின்றன.

  ரேடியோ ஜாக்கியாக இருந்து சீரியலில் நடிக்க வந்த ஒரு நடிகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொன்னார். "நீங்க பேசவே வேணாம்... வந்து அழுதுட்டு போனா போதும்னு சொன்னாங்க... நானும் சீரியல்ல அதைத்தான் செய்துட்டு இருக்கேன்" என்று சொன்னார்.

  இன்றைக்கு டிவியில் ஒளிபரப்பாகும் பத்துக்கு 8 சீரியல்கள் அழுகாச்சி காவியங்களாகத்தான் இருக்கிறது. ஏதோ போனா போகட்டும் என்று சில சேனல்களோ காமெடி சீரியல்களையோ அல்லது பேய் கதை சொல்லியோ பயமுறுத்துகிறார்கள்.

  சீரியல் நடிகைகள் வீட்டை விட்டு கிளம்பும் போதே அழுகைக்கு தயாராகிவிடுவார்கள். அழகான நாயகி என்றாலும் அழவிட்டு பார்ப்பதில்தான் அந்த சீரியலின் இயக்குநருக்கு அப்படி ஒரு ஆனந்தம். சீரியலின் ஆரம்பத்தில் வீரவசனம் பேசும் நாயகி கூட சில எபிசோடுகள் முடிந்த உடன் வில்லிகளின் டார்ச்சர் தாங்காமல் கண்ணீர் சிந்தி இல்லத்தரசிகளின் உச்சு கொட்டல்களை வாங்கினால்தான் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறும்.

  சீரியல்களில் நடிகர்களுக்கு வந்து போகும் வாய்ப்புதான். இங்கு ஹீரோயின்கள், வில்லிகளுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம். ஹீரோயின்களை விட வில்லிகளை கொண்டாடுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் எனவே நிறைய ஹீரோயின்கள் வில்லிகளாக நடிக்க ஆசைப்படுகின்றனர். வில்லிக்கு அழுகை கிடையாது... ஹீரோயின்கள்தான் சீரியல்களில் கண்ணீர் சிந்துகின்றனர். அவர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரும் காசுதான். இப்படி கண்ணீரும் கம்பலையுமாக நடிக்கும் சீரியல்களைப் பார்த்து நம் வீட்டு பெண்மணிகளின் ரத்தக்கொதிப்பு எகிறுகிறது. ஒரே அழுகையும் ஆர்பாட்டமுமாய் நாள்தோறும் நகர்கிறது தென்னிந்திய பெண்மணிகளின் நாட்கள்.

  இந்த அழுகைக்கும் சிரிப்பும் இடையே வாழும் சீரியல் நட்சத்திரங்களின் வாழ்க்கையே எபிசோடுகளில் எண்ணும் அளவிற்கு இருக்கிறது. ‘அழுதாத்தான் துட்டு... இல்லையா அவுட்டு' என்பதுதான் டிவி சீரியலின் தாரக மந்திரம். அதுவும் வாங்கும் காசுக்கு வஞ்சனையில்லாமல் நடிக்கும் (அழுது புலம்பும்) சில நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் டிவி திரையில் வந்தாலே... ‘வந்துட்டாங்க 5 ரூபாய் சம்பளத்திற்கு 500 ரூபாய்க்கு அழும் நடிகை' என்று சீரியல் ரசிகர்களே சொல்லிவிடுவார்கள்.

  கரக்காட்டக்காரன் படத்தில் கவுண்டமணி சொல்லுவார் செந்திலைப்பார்த்து "ஏண்டா நீ வாங்குற அஞ்சு, பத்துக்கு இதெல்லாம் தேவையா?" என்று கேட்பார். அதற்கு செந்தில், "எல்லாம் ஒரு வௌம்பரம்" என்று சொல்வார். அழும் நடிகைகளைச் சொல்லியும் குற்றமில்லை. இயக்குநர் சொல்படி கேட்டு நன்றாக அழுது புரண்டு நடித்தால்தான் அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் அந்த நடிகைக்குக் கிடைக்கும். இல்லை என்றால் ‘இவருக்கு பதில் இவர்' என்றோ, போட்டோவுக்கு மாலை' போட்டு அவர்களின் கதையை முடித்து விடுவார்கள். அப்புறம் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று பயந்தே அழுது புரண்டு நடிக்கிறார்கள் நடிகைகள். பாவம் இவர்கள் சூட்டிங் முடிந்து வீட்டிற்கு போயாவது தங்களின் சொந்த பந்தங்களுடன் கூடியாவது சிரிப்பார்களா? இல்லையா? தெரியாது.

  இப்படி அழுகாச்சி காவியங்களைப் தினசரி பார்க்கும் நம் வீட்டு பெண்மணிகளோ ஒரு எபிசோடை மிஸ் செய்தால் கூட விடாமல் வெளியூருக்கு போன் போட்டு அந்த கதையைக் கேட்டு கண்ணீர் சிந்துவார்கள். அதுசரி ‘ஏம்பா ஆட்டோ சீக்கிரம் போப்பா பிரசவ வலியால துடிச்ச மலருக்கு என்ன ஆச்சோ? அவளை போய் கோபி பார்த்தானோ இல்லையோ? என்று சொந்த கதை, சோக கதை போல சீரியல் கதை பேசும் பெண்மணிகள் இருக்கும் வரை இந்த அழுகாச்சி காவியங்கள் முடிவுக்கு வராது!

  ஓகே..ஓகே.. சீரியல் ஆரம்பிக்கப் போகுது.. போய் நல்லா அழுங்க..ஸாரி... பாருங்க!

  English summary
  Tamil Nadu housewives and those sitting at home need to break monotony and the only form of entertainment is television. Many South Indian TV Channels broadcast TV Serials episodes in drama nature during prime time, in the morning as well as in the evening show women as weak and cry over even small things.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X