twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுவினால் வீழும் என் தேசம்…

    By Mayura Akilan
    |

    Liquor
    மது அரக்கன் பிடியில் சிக்கி எத்தனையோ இளைய தலைமுறையினர் இன்றைக்கு மண்ணோடு மண்ணாகி வருகின்றனர். எத்தனையோ குடும்பங்கள் அவமானத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    பள்ளிச் சிறுவர்கள் முதல் 80 வயதாகும் தாத்தாக்கள் வரை டாஸ்மாக் கடைகளில் மதுவிற்காக கையேந்தும் நிலை இன்றைக்கு தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

    18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 6ல் ஒருவர் குடிகாரர் என்கிறது அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம். இந்த மதுவை போதைக்காக தொட்டு அதற்கே அடிமையாகி பணம், பொருள், உறவு என அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கின்றனர் என்று உணர்த்தியது விஜய் டிவியின் என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சி.

    நாற்றம் சகிக்கலையே...

    மது குடித்துவிட்டு வருபவர்களின் அருகில் சென்றாலே ஒருவித கெட்ட நாற்றம் வரும். இது எல்லோரும் சகித்துக்கொள்ள முடியாது. இதைத்தான் படித்த பெண்கள் முதல் பாமரப் பெண்கள் வரை நிகழ்ச்சியில் கூறினார்கள். சகிக்க முடியாத நாற்றம் என்றாலும் இந்த நாற்றத்தோடு வரும் கணவரைத்தான் சகித்துக்கொண்டு இருக்கின்றனர் இந்தியப் பெண்மணிகள். போதைக்காக ஆண்கள் குடித்தாலும் பாதிக்கப்படுவது என்னவே பெண்கள்தான்.

    குடியேறும் சந்தேகம்...

    மதுவினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்கள். பலருமே காதலிக்கும் போது அவர் குடிகாரர் என்று தெரியாது. திருமணத்திற்குப் பிறகுதான் அவர் குடிப்பதே தெரியும் என்று கூறினார்கள். குடியினால் புத்தி மாறி கடைசியில் சந்தேகப்பட்டு அடித்து உதைப்பார் என்று கூறினார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.

    சந்தேகம் ஏன் வருகிறது

    20 வயதில் மது அருந்தும் ஒருவர் 27 வயதில் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு மது போதையினால் ஆண்மை தன்மையில் சிக்கல் ஏற்படும். தன்னுடைய இயலாமையினாலேயே மனைவி மீது சந்தேகம் ஏற்பட்ட காரணமாகிறது என்றனர் நிபுணர்கள்.

    ஆரம்பத்திலேயே தடுக்கலாம்

    இன்றைக்கு வீட்டில் பெற்றோர்கள் யாருக்கும் தங்கள் பையன் மீது சந்தேகம் வருவதில்லை. பையன் குடிக்கிறானா? என்று தெரிந்தால் உடனே அதனால் ஏற்படும் தீமைகளை பேசி புரியவைக்கவேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே இதற்கு சிகிச்சை செய்துவிட்டால் எளிதில் குணமாக்கிவிடலாம் என்று கூறினார் உளவியல் நிபுணர்.

    நண்பர்களுடன் பார்ட்டி

    இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் வாரத்திற்கு இரண்டு பார்ட்டியாவது கொண்டாடுகின்றனர். அதில் மது கண்டிப்பாக இடம் பெறுகிறது இதுவே நாளடைவில் பழக்கமாகிவிடுகிறது என்றார் ஒருவர்.

    அதிகரிக்கும் டாஸ்மாக் வருமானம்

    டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுவிற்பனை தொடங்கியபின்னர் நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன் 30 வயதிற்கு மேல் குடிக்கத் தொடங்கினர். இன்றைக்கோ 19 வயதில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம்.

    மாணவர்களுக்கும் குடிக்கு அடிமை

    பள்ளி அருகில் டாஸ்மாக் இருக்கக்கூடாது 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்பது விதி. ஆனால் பள்ளி மாணவர்கள் மது வாங்குகின்றனர். இந்தியாவில் 12.7 சதவிகிதம் பள்ளி பிள்ளைகள் மது அருந்துகின்றனர். அதிகமாக மது குடிப்பது மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்று புள்ளிவிபரம் கூறி அதிரவைத்தார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத்.

    விழிப்புணர்வு இல்லை

    இன்றைக்கு மதுவைத் தொடும் இளைஞர்கள் ஜாலிக்காக அதை பழகிக் கொள்கின்றனர். பின்னர் அதுவே பழக்கமாகிவிடுகிறது. அதற்கு அடிமையாகி மது இல்லாவிட்டால் வாழமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே இளைய தலைமுறையினருக்கு மனரீதியான சிகிச்சை அவசியம் என்றார் உளவியல் நிபுணர்.

    டென்சனை போக்கவேண்டும்

    மனஅழுத்தம், கோபம், இயலாமை போன்ற காரணங்களினால் மது அருந்தும் சிலர் நாளடைவில் மதுவிற்கு அடிமையாகிவிடுகின்றனர். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது அதற்கான மாற்றுவழிகளை இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றனர் நிபுணர்கள்.

    பெற்றோர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுதல்..

    நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞன், தன் தந்தையைப் பார்த்துதான் மது குடிக்க பழகியதாக கூறினான். பெரியவர் ஒருவர் தன் பேரனை மதுக்கடைக்கு அழைத்து சென்று வருவதாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இது மரபு ரீதியான ரிஸ்க் என்றும் கூறினர்.

    பெண்களும் அடிமையாவது ஏன்?

    இன்றைக்கு எம்.என்.சி கம்பெனிகளில் பணிபுரியும் பெரும்பாலான பெண்கள் மது அருந்துகின்றனர் என்று புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதனால் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் அதிகம். உள்ளூர் சாலைகளில் 3ல் ஒரு பங்கினர் மது குடித்துவிட்டுதான் வண்டி ஓட்டுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    தமிழகம் 3 வது இடம்

    இந்தியாவில் பஞ்சாப், ஆந்திராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது. வருவாயில் அதிக வரி காரணமாக தமிழகமே முதலிடத்தில் உள்ளது.

    மதுவினால் ஏற்படும் நோய்கள்

    மது அருந்துவதன் மூலம் உச்சஞ்தலைமுதல் உள்ளங்கால் வரை நோய்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மதுவினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அல்சீமர் வியாதி வரும். வாய், தொண்டையில் புற்றுநோய் வரும். இருதயம் பிரச்சினை ஏற்பட்டு மாரடைப்பு, கல்லீரலில் சிக்கல், வயிற்றில் வாய்வு கோளாறு ஏற்படும். கணையம் பாதித்து சர்க்கரை வியாதி ஏற்படும். எலும்புகள் வலுவிழக்கும் மூட்டு வலி வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கி குடித்துவிட்டுதான் வேறு வேலை பார்க்கின்றனர்.

    கண்டிப்பாக மீளலாம்

    மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை கூறிய இந்த நிகழ்ச்சியில் மதுவின் கோரப்பிடியில் சிக்கி மீண்டவர்களைப் பற்றியும் கூறினார்கள். மதுவினால் அதீத பாதிப்பிற்குள்ளாகி இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்து அதில் இருந்து தப்பியவர் இப்போது மதுவின் பிடியில் இருந்து மீண்டுவிட்டதாக கூறினார்.

    மது குடிக்கும் பிள்ளையை விஷம் வைத்து கொலை செய்துவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு வேதனைப் படுத்திய ஒருவர் தற்போது அந்த போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு புது வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

    சுய கட்டுப்பாடு அவசியம்

    மது அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு சுய கட்டுப்பாடு இருந்தால் இந்தப் பழக்கத்தில் இருந்து கண்டிப்பாக மீளலாம் என்று கூறினார் உளவியல் நிபுணர். இதற்கான மீட்பு மையங்கள் பலவும் இருக்கின்றன. எனவே எதிர்கால தலைமுறையை கருத்தில் கொண்டு மதுவின் பிடியில் இருந்து விடுபட முயலவேண்டும் என்ற வேண்டுகோளுடன் முடிந்தது இந்த நிகழ்ச்சி.

    English summary
    En Desam! En Makkal! A societal malaise in front of a well informed public, analyse it from all angles, view the other side of the coin, invite affected people who'll share their stories and find ways to usher in a change.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X