»   »  நாங்க திருந்தவே மாட்டோம்... 2016லும் அடம் பிடிக்கும் சீரியல் வில்லிகள்!

நாங்க திருந்தவே மாட்டோம்... 2016லும் அடம் பிடிக்கும் சீரியல் வில்லிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தவர் குடியை கெடுப்பது எப்படி என்று சீன் பை சீன் பாடம் எடுப்பதில் டிவி சீரியல் வில்லிகளை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. கூடவே இருந்து குழி பறிப்பது. சொத்துக்காக சொந்த மாமியாருக்கே விஷம் வைப்பது போல காட்சியமைப்பது உறவுகளை சந்தேகத்திற்குள்ளாக்குகிறது.

வில்லிகள் எல்லாம் திருந்தியது போல நடித்து திடீர் என வில்லத்தனம் செய்வது என டிவி சீரியல்களில் கதைகள் எழுதப்படுவதால் சொந்த மாமியாரை மருமகளும், மருமகளை மாமியாரும் நம்பாமல் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தோழி என்று நம்பி வீட்டிற்குள் விட்டால் குடி கெடுக்கும் கூட்டாளிகளாக இருக்கின்றனர். நண்பன் என்று நம்பினால் நட்டாற்றில் விட்டுச் செல்லும் நயவஞ்சகர்கள்தான் இப்போது இருக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்கின்றனர் டிவி சீரியல் இயக்குநர்கள். தமிழ் சேனல்களில் பல வில்லிகள் இருக்க அண்ணியார் காயத்ரி தொடங்கி மருமகள் உமா வரைக்கும் வில்லிகளின் ஆதிக்கமும், வில்லன்களின் நயவஞ்சகமும் தொடர்கிறது.

தெய்வமகள் - காயத்ரி

தெய்வமகள் - காயத்ரி

ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டு மூத்த மருமகளாய் நுழைந்து அந்த வீட்டு சொத்தை அபகரிக்க அனைவரையும் நடுத்தெருவில் நிறுத்துவேன் என்று சபதம் போடுவதில் ஆகட்டும், ஸ்கெட்ச் போட்டு ஆளை தூக்குவதிலாகட்டும் அண்ணியார் காயத்ரியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. சொத்துக்களை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று காயத்ரி போடும் திட்டங்கள் யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இப்படியும் ஆட்கள் இருப்பார்களா? என்று யோசிக்க வைக்கிறார் காயத்ரி.

வாணி ராணி - டிம்பிள்

வாணி ராணி - டிம்பிள்

வாணி ராணி சீரியலில் மூத்த மருமகள் டிம்பிள் அட்டகாசம், அடாவடித்தனம் யாராலும் எதிர்பார்க்க முடியாதவை. கணவனை அடிப்பதாகட்டும், விவாகரத்து கேட்பதாகட்டும் அடிதடி மருமகள், மாமியாரை அவமானப்படுத்த மருமகள் போடும் திட்டங்கள் நினைத்து கூட பார்க்க முடியாதவை. கணவனே வேண்டாம் என்றால் கர்ப்பம் எதற்கு என்று கலைக்க போராடும் கொடூர குணம் கொண்ட டிம்பிள் திருந்தாத ஜென்மம் என்று அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட வில்லி.

பிரியமானவள் - ஈஸ்வரி

பிரியமானவள் - ஈஸ்வரி

உமா கிருஷ்ணன் குடும்பத்திற்கு உறுதுணையாய் இருக்கும் ஈஸ்வரியின் கணவர். ஆனால் கூடவே இருந்து உமாவின் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் தோழி ஈஸ்வரி. போலீஸ் கிரியுடன் சேர்ந்து உமா கிருஷ்ணன் குடும்பத்தை சிதைத்து, சொத்துக்களை சூறையாட நினைக்கும் போது கொடூர முகம் வெளிப்படுகிறது. நாங்க எப்பவுமே இப்படித்தான் சொல்லாமல் சொல்கிறார் வில்லி ஈஸ்வரி.

தாமரை - உமா

தாமரை - உமா

தாமரை சீரியலில் மூத்த மருமகளாக வந்து புகுந்த வீட்டு நிம்மதியை கெடுக்க நினைக்கும் வில்லியாக வரும் உமா, கொஞ்சம் திருந்தினாலும், கொலைகாரி டாக்டருடன் இணைந்து மீண்டும் வில்லத்தனம் செய்வது திருந்தாத ஜென்மம் என்று சொல்லாமல் சொல்கிறார். மாமியாரை அழ வைப்பதில் இந்த மருமகள்களுக்கு அப்படி என்னதான் சந்தோசமோ ?

தலையணைப் பூக்கள் சாண்ட்ரா

தலையணைப் பூக்கள் சாண்ட்ரா

மூத்த மருமகள் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்தான் தலையணைப் பூக்கள் சீரியல் மருமகள். சொத்துக்களை குறிவைத்து பழி போட்டு திருமணம் செய்வதிலாகட்டும், அம்மாவின் சொல்படி புகுந்த வீட்டில் ஆட்டி வைப்பதாகட்டும், நாங்கல்லாம் அப்பவே அப்படி, இப்ப சொல்லவா வேணும் என்று கேட்கிறார் சாண்ட்ரா.

மரகத வீணை இன்ஸ்பெக்டர் கவிதா

மரகத வீணை இன்ஸ்பெக்டர் கவிதா

அடுத்த பெண்ணின் கணவருக்கு ஆசைப்படும் வில்லிகள் எல்லாம் அதில் இன்ஸ்பெக்டர் கவிதாவிற்கு முதலிடம் தரலாம். ஆசைப்படும் ஆணின் மனைவிக்கு கர்ப்பம் ஏற்படாமல் தடுப்பது, திட்டமிட்டு தோழியின் கணவனை வலையில் விழ வைப்பது என இன்ஸ்பெக்டர் செய்யக்கூடாத செயல்களை செய்யும் கவிதாவும் திருந்தாத வில்லிகள் லிஸ்டில் இருப்பவர்தான்.

கல்யாண பரிசு மருமகள்

கல்யாண பரிசு மருமகள்

கணவன் குடும்பத்தை கூண்டோடு அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு திட்டமிடும் மருமகள், மாமியாரைக் கொல்ல காரட்டில் விஷம் வைத்து அதை திட்டமிட்டு மாமியாரை சாப்பிட வைப்பது என யாராலும் யோசிக்க முடியாத அளவிற்கு வில்லத்தனம் செய்கிறாள் கல்யாண பரிசு சீரியல் வில்லி மருமகள். வில்லிகள் லிஸ்டில் இன்னும் எத்தனையோ பேர் இருக்கின்றனர், அவர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் ஒரு பக்கம் போதாது. இவர்கள் எல்லாம் எப்போதான் திருந்துவார்களோ?

English summary
here is the list of top most Villies in Tamil Television serials.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil