2 முறை நோட்டீஸ் கொடுத்தும் அலட்சியம்.. 5 கோடி பிக் பாஸ் செட்டுக்கு பூட்டு.. இப்படி ஆகிப்போச்சே!
பெங்களூர்: கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வந்த கன்னட பிக் பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி அதிரடியாக நிறுத்தப்பட்டு, பிக் பாஸ் வீட்டுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (KSPCB) உத்தரவைத் தொடர்ந்து, பெங்களூரு பிடதியில் உள்ள 'ஜாலிவுட் ஸ்டுடியோஸ்' வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 'பிக் பாஸ் கன்னடம்' செட் உடனடியாக மூடப்பட்டது. இதனை எதிர்த்து பிக் பாஸ் குழு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். 2 முறை நோட்டீஸ் கொடுத்தும் அலட்சியப்படுத்தியதன் விளைவு தான் இது என்கின்றனர்.
சுற்றுச்சூழல் விதிமீறல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சிக் குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் பெரும் இழப்பையும், ஏமாற்றத்தையும் சந்தித்துள்ளனர்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் திடீர் மூடும் உத்தரவால், பிக் பாஸ் வீட்டில் இருந்த 17 போட்டியாளர்களும், நிகழ்ச்சியின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சுமார் 700 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். போட்டியாளர்களின் ஒரு வார சண்டைகளும், மகிழ்ச்சியும் ஒரே இரவில் முடிவுக்கு வந்த நிலையில், திரைக்குப் பின்னால் உழைத்த 700 பேரின் வேலைவாய்ப்பும் பறிபோனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் ஷட்டவுன் உத்தரவால், பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனமான என்டமோல்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் வீடு கட்டுவதற்கு மட்டும் ₹5 கோடிக்கும் மேல் செலவாகியிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதைத் தவிர, செட் அமைத்தல், உபகரண வாடகை, ஊழியர் சம்பளம் போன்ற பிற தயாரிப்புச் செலவுகளும் நிறுவனத்திற்குப் பெரும் இழப்பாக மாறியுள்ளன.
முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) செயல்படாதது மற்றும் நீர் மேலாண்மை விதிகளை மீறியது போன்ற காரணங்களுக்காக இந்த ஸ்டுடியோ மூடப்பட்டுள்ளது. இந்த விதிமீறல்களுக்காக தயாரிப்பு நிறுவனம் தற்போது கடுமையான சட்ட விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறது. அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளுக்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. சிலர் "பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லாமல் எப்படி?" என்று வருத்தம் தெரிவித்தாலும், பெரும்பாலோர் "இது சுற்றுச்சூழலுக்கான ஒரு விழிப்புணர்வு அழைப்பு" என்றும், பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
பணத்தையும், புகழையும் மட்டுமே கருத்தில் கொள்ளாமல், சுற்றுச்சூழல் இணக்கத்தைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் சண்டைகள் மட்டுமே பரபரப்பை ஏற்படுத்தும் என்று நினைத்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு, சுற்றுச்சூழல் விதிமீறல் ₹5 கோடி இழப்புடன் ஒரு பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











