twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''பண்டிகை என்பதே சொந்த பந்தங்கள்தான்''… நீயா நானாவில் சுவையான விவாதம்

    By Mayura Akilan
    |

    Neeya naana
    தீபாவளியோ... பொங்கலோ... மாசி கொடையோ.... திருமணமோ... அங்காளி, பங்காளி, மாமன், மச்சான் ஆகியோரோடு இணைந்து கொண்டாடுவது என்பதே ஒரு சந்தோசம்.இதுபோன்ற நாட்களில்தான் நம் குழந்தைகளுக்கு சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை போன்றோர்களைப் பற்றியும், அவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    இந்தவாரம் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் உறவுகளைப் பற்றியும் அவர்களின் வீட்டு விசேசங்களுக்கு செல்வதைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. என்னுடைய குழந்தைகளுக்கு உறவுகளைப்பற்றி தெரியாமலேயே போய்விடுமோ என்பதனாலேயே உறவினர்கள் வீட்டுக்குப் போகிறோம் என்றார் ஒருவர்.

    இன்றைக்கு உறவினர் வீட்டுக்குப் போனாலே பிரச்சினைதான் என்கிறார் அவருடைய மனைவி. ஷாப்பிங் போவதுதான் ஜாலி என்கிறார் மனைவி. ஆனால் கணவருக்கோ உறவினர்கள் வீட்டுக்கு போவதுதான் சந்தோசம்.

    ஆனால் இன்றைக்கு உறவுகளுடன் கொண்டாடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

    பேருந்து, ரயில்களில் டிக்கெட் போட்டு அடித்து பிடித்து போய் அப்படி விசேசங்களை கொண்டாட வேண்டுமா? நாம் இருக்கும் ஊரில், நம் வீட்டில் கொண்டாடினால் என்ன? என்று கேட்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.

    ஆனால் உறவினர்கள் வீட்டு விசேசத்திற்கு செல்வதே ஒரு சந்தோசம். நம்முடைய சொந்தங்களுடன் இந்த பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பதே ஒரு மகிழ்ச்சி.

    பணத்தை நோக்கி பயணப்படும் இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு போனோமா? வீட்ல ரெஸ்ட் எடுத்தோமா என்று மாறிவிட்டனர். இதில் எங்கே உறவினர்கள் வீட்டு விசேசத்திற்கு போவது என்று கேள்வி கேட்கின்றனர் இளைஞர்கள்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் மற்றும் சுந்தரபாண்டியன் இயக்குநர் பிரபாகரன் பங்கேற்றனர்.

    உறவினர்கள் வீடு அதிக தூரம் என்பதால் தன்னால் போகமுடியவில்லை என்றார் கணேஷ். கூட்டுக்குடும்பமாகவும் ஜாலியாகவும் இருக்க ஆசைதான் ஆனால் என்னால் முடியாது. காரணம் என்னுடைய வேலை அப்படி மாறிவிட்டது என்றார். தன்னுடைய வேலைச்சுமையினால் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதே சிரமமாக இருக்கிறது. பணம் இருந்தாதால் உறவுகளே மதிக்கின்றனர் என்று கூறிய கணேஷ் என் மனைவி குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டுதான் உறவுகளுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார் கணேஷ்.

    நட்பு என்பது குறுகிய காலகட்டம் இறுதி வரைக்கும் வரப்போவது உறவு என்றார் பிரபாகரன். உறவினர் வீட்டு விசேசத்திற்கு செல்ல நேரமில்லை என்பது பொய்... மனதிருந்தால் மார்க்க முண்டு என்று கூறினார் பிரபாகரன்.

    நண்பர்கள் வீட்டுக்கு போக முடிகிற உங்களால் உறவினர்கள் வீட்டுக்கு ஏன் போகமுடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    பணம், வேலை போன்றவைகளை நோக்கிய பயணமாக இருப்பதால் உறவுகள் வீட்டுக்குச் செல்ல முடிவதில்லை. அது காலம் கடந்து ஒரு வலியை ஏற்படுத்தும் என்றார் பிரபாகரன். நம்முடைய பெற்றோர்கள் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுகொண்டுதான் இருந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் யாரும் இதை ஏன் விரும்புவதில்லை என்று கேட்டார்.

    இன்றைக்கு நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு நண்பர்களுக்கு கொடுப்பதில்லை. உறவினர்கள் போட்டியும், பொறாமையுடனும் இருக்கின்றனர் என்பதால் அவர்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது. உறவினர்களை விட்டு ஒதுக்கிவிட்டனர். இன்றைக்கு நட்புக்குள்ளும் போட்டி, பொறாமை உணர்வு வந்துவிட்டது. அப்போது உறவினர்களின் அருமை தெரியவரும் என்றும் கூறினார் பிரபாகரன்.

    உறவுக்காரர்கள் முக்கியமில்லை என்கின்றனர் சிலர், ஆனால் என்ன பிரச்சினை என்றாலும் உறவுகளுடன் இருக்கவேண்டும் என்கின்றனர் சிலர். நேற்றைய விவாத நிகழ்ச்சி கொஞ்சம் உணர்வுப் பூர்வமாக இருந்தது. உறவுகளின் அருமையைப் பற்றி பேசிய நபர்கள், உறவுகள் வேண்டாம் என்று பேசியவர்களுக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்தனர். இது பலரின் மனங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உறவுகள் வேண்டாம் என்று கூறியவர்கள் கூட நீயா நானா நிகழ்ச்சிக்கு வந்து உறவினர்களாக மாறிப் போனதுதான் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    நம்முடைய சமூகம் உறவுகளால் பின்னப்பட்டது. இதை மாற்ற நினைத்தாலும் முடியாது அதுதான் உறவின் சக்தி என்று முடித்தார் கோபிநாத்.

    English summary
    Neeya Naana a talk show which brings two polarized sections of society to a single platform and encourages them to iron out their difference.
 
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X