twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கந்தக பூமியில் கருகும் உயிர்கள்….

    By Mayura Akilan
    |

    Sivakasi Fire
    குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளைப் போல அங்கு நிகழும் வெடிவிபத்துகளும் இப்பொழுது இந்தியாவின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளன.

    விபத்து நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டால் மட்டுமே பட்டாசு விபத்துகள் பற்றிய விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ஊடகங்கள் இந்த விபத்துகளைப் பற்றி செய்திகளை வெளியிடுவதும். சில நாட்களில் அவை அடங்கிவிடுவதும் வாடிக்கையாகிவிடுகிறது. பின்னர் அதிகாரிகளின் ஆய்வு, பணம் கைமாறுவது என வழக்கமான நிகழ்வுகள் அரங்கேறும்.

    புதன்கிழமையன்று முதலிப்பட்டியில் நடந்த பட்டாசு விபத்தில் மட்டும் 38 பேர் உயிரிழந்தனர்.

    நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அன்று மாலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பட்டாசு விபத்துக்களைப் பற்றி 'ரௌத்திரம் பழகு' நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை காண நேரிட்டபோது தினசரி வாழ்வா சாவா என்ற நிலையிலேயே பல லட்சம் மக்கள் சிவகாசியைச் சுற்றி வசிப்பதை காண நேரிட்டது. இது கடந்த ஆண்டு நடந்த கோரவிபத்தின் போது எடுக்கப்பட்டது. மறு ஒளிபரப்புதான் என்றாலும் விபத்துகள் ஆண்டுதோறும் நடப்பதால் பேட்டிகளும், புள்ளிவிபரங்களும் புதிதுபோலவே இருந்தது.

    கடந்த 1981 ம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டுவரை மட்டும் பல நூறு விபத்துக்கள் சிவகாசியில் நடந்து விட்டன. தினசரி வெடிச்சத்தம் கேட்பதைப்போல விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிப் போய்விட்டது. ஆனால் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்ற கருத்தை முன்வைத்தது அந்த நிகழ்ச்சி.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகளின் உயிரிழப்பை அடுத்து சில சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அது சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு நடத்தச் செல்லும் அதிகாரிகளின் கைகளில் பணம் கொடுத்து அவர்களின் வாயை அடைத்துவிடுகின்றனர் பட்டாசு நிறுவன முதலாளிகள். சரியான பாதுகாப்பு இல்லை. ஆம்புலன்ஸ் வசதியில்லை. நகரில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினால் விபத்து நேரிட்டாலும் அந்த பகுதிக்குச் சென்றடைய தாமதமாகிறது.

    சிவகாசியைச் சுற்றி வசிக்கும் பல லட்சம் பேர் திரும்ப வருவோமா என்பதைப் பற்றி தெரியாமலேயே தினசரி பட்டாசுத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். அவர்களுக்கு உயிர் பற்றிய அச்சம் இருந்தும் வாழ்ந்தாக வேண்டுமே என்பதனால் ஆபத்து என்று தெரிந்தும் பட்டாசுத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்கின்றனர். கண் முன்னே நடந்த கோர விபத்தை பார்த்த பின்னரும் பட்டாசு நிறுவனத்தில் அவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்வதற்குக் காரணம் வாழவேண்டுமே என்பதற்காகத்தான் தொடர்ந்து வேலைக்குச் செல்வதாக தொலைக்காட்சியின் பேட்டியில் ஒரு பெண் தொழிலாளி கூறியதைக் கேட்டபோது நெஞ்சமெல்லாம் ரணமாகிப்போனது.

    ஊழல் அதிகாரிகளும், பொறுப்பற்ற அரசியல்வாதிகள் இருப்பதனால்தான் சிவகாசியிலோ, விருதுநகரிலோ, சாத்தூரிலோ சரியான மருத்துவமனை வசதியில்லை. தீக்காய சிகிச்சைபிரிவு இல்லை. அங்குள்ள மருத்துவமனைகளில் வசதிகள் இல்லாத காரணத்தினால் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனாலேயே உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. அரசிடம் இருந்து அறிவிப்புகள் மட்டுமே வெளியாகின்றன. ஆனால் அவற்றை செயல்படுத்துவதற்குத்தான் சரியான அமைச்சர்களோ, அதிகாரிகளோ இல்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் ஆதங்கம்.

    ஒவ்வொருமுறையும் வெடி விபத்து ஏற்பட்ட பின்னர் அரசு நிவாரணத்தொகை வழங்குவதை விட அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையோடு நிறைவு பெற்றது 'ரௌத்திரம் பழகு' நிகழ்ச்சி

    English summary
    Puthiya Thalaimurai Television telecasted Sivakasi fireworks accident in Rowthiram Pazhagu program.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X