For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழ் டிவி சீரியல்களில் அதிகரித்துவிட்ட ஆபாசம்! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

  By Veera Kumar
  |

  சென்னை: அடக்க ஒடுக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் டிவி சீரியல்கள் தற்போது தங்கள் எல்லையை தாண்டி ஆபாசம், அறுவறுக்கத்தக்க வசனங்கள் என நீண்டுவிட்டன. குடும்பத்தோடு மாலை நேரங்களில் டிவிகளின் முன்பு உட்காரும் பெரியவர்கள் இந்த காட்சிகளை கண்டு நெளிந்து கொண்டுள்ளனர்.

  சரி-தவறு என்ற வாதங்களை தாண்டி தொலைக்காட்சி சீரியல்கள் தமிழ் குடும்பங்களின் அங்கமாகிவிட்டன. முதலில் சன் டிவிதான் இந்த சீரியல் கலாசாரத்தை தொடங்கி வைத்தது.

  கோதாவில் குதித்த விஜய்

  கோதாவில் குதித்த விஜய்

  அதையே பட்டி, டிங்கரிங் செய்து விஜய் டிவி புதுப்பொலிவுடன் தர ஆரம்பித்ததும், ரசிகர்களின் கவனம் அந்த தொலைக்காட்சிக்கு சென்றது. கனாக்கானும் காலங்கள், சரவணன் மீனாட்சி, ஆபீஸ், மகாபாரதம், கல்யாணம் முதல் காதல்வரை, போன்ற பல சீரியல்கள் விஜய் டிவிக்கு பெயர் வாங்கி தந்தன.

  சன்டிவி சீரியல்கள்

  சன்டிவி சீரியல்கள்

  சன்டிவி முன்பு போல சீரியல் விஷயத்தில் தற்போது ஃபுல் பார்மில் இல்லை. கோலங்கள், மெட்டி ஒலி என 'வரலாற்று சிறப்புமிக்க காவியங்களை' காண்பித்த அந்த சேனலை தற்போது, தெய்வமகள், வாணி ராணி ஆகிய சீரியல்கள் தாங்கிபிடித்து வருகின்றன. இவ்விரு சேனல்களுக்கும் நடுவேயான போட்டியினாலோ என்னவோ தெரியவில்லை, இப்போதெல்லாம் இரு சேனல் சீரியல்களிலும் ஆபாசம் கலக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் டிவி இதில் முன்னோடி.

  ஒயின் குடிச்சா தப்பில்லையா?

  ஒயின் குடிச்சா தப்பில்லையா?

  கல்யாணம் முதல் காதல்வரை என்ற சீரியல் விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஆபீஸ் போய் வீடு திரும்புவோர், குழந்தை குட்டிகளோடு அக்கடா என்று உட்காரும் நேரம் அது. அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் மேற்கண்ட சீரியலில் சில தினங்கள் முன்பு காண்பிக்கப்பட்ட காட்சி தூக்கிவாரி போட்டது. தனது தோழிக்கு ஒயினில் மயக்க மருந்து கொடுத்து ஆண் கதாப்பாத்திரம் ஒன்று பலாத்காரம் செய்ய திட்டமிடுவதுதான் அக்காட்சி. அக்காட்சியில் ஒயின் குடிக்கும் பழக்கமில்லை என்று பெண் கூறியும், அதில் தப்பில்லை என்று 'விளக்கம்' கொடுத்து குடிக்க கொடுக்கிறது ஆண் பாத்திரம்.

  பெண்களையும் கெடுக்கலாமா

  பெண்களையும் கெடுக்கலாமா

  ஒயின் குடிக்கப்படும்போது, மது உடல் நலத்துக்கு கேடு என்ற வாசகம் கீழே ஓடுகிறது. ஆனால் காட்சியில் ஒயின் தவறில்லை என்று காண்பிக்கப்படுகிறது. நமது சமூகத்தில் ஆண் குடித்து கெட்டுச்சுவராய் போயாச்சு. எஞ்சியிருப்பது பெண் இனம். அவர்களையும் குடிப்பதை எளிதாக எடுத்துக்கொள்ள செய்யும் காட்சியமைப்பு அது. நல்லவேளை, அந்த பெண் ஒயினை குடிப்பதற்குள், வில்லனுக்கு போன் வந்ததால் பலாத்கார காட்சி ரத்தாகியது.

  கிளிவேஜ்

  கிளிவேஜ்

  அதே சீரியலில், ஹீரோவை பிரிந்து அடுத்தவருடன் வாழும் மாஜி மனைவி கேரக்டரில் வரும் பெண்மணி, சில சீன்களில் தனது கிளிவேஜ் தெரிய அமர்ந்து புதுக் கணவருடன் உரையாடும் காட்சியும் சில தினங்கள் முன்பு ஒளிபரப்பானது. சீரியல்களில் கிளிவேஜ், தொப்புள், தொடை போன்ற பெண்களை காட்சிப் பொருளாக்கும் விவகாரங்கள் காண்பிக்கப்படாது என்ற நம்பிக்கை தகர்த்தெறியப்பட்ட தருணம் அது.

  லைவ் பிரசவம்

  லைவ் பிரசவம்

  இதெல்லாம்போதாது என்று, கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில், நேற்று வியாழக்கிழமை காண்பிக்கப்பட்ட மற்றொரு காட்சி அதிர்ச்சியின் உச்சம். அந்த காட்சியில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி வருகிறது. பல் டாக்டரான ஹீரோயின் பிரசவம் பார்க்க வேண்டிய கட்டாயம். அதுவரை ஓ.கே. ஆனால் பிரசவ காலகட்டத்தை காட்சியாக காட்ட வேண்டிய தேவை என்ன வந்தது. அதுவும், காலுக்கு கீழே போர்வையை அவ்வப்போது தூக்கிக் கொண்டு அந்த பெண் உள்ளே நுழைவதும், வெளியே வந்து போனில் பேசுவதுமாக சித்தரிக்கப்பட்ட காட்சி, ரொம்ப அநியாயம்.

  தாய்மார்களுக்கு தர்ம சங்கடம்

  தாய்மார்களுக்கு தர்ம சங்கடம்

  "வயிற்றில் இருந்து அப்படியே தொபுக்கடீர் என்று நீ பிறந்தாய்" என்று குழந்தைகளிடம் சொல்லி வைத்திருந்த தாய் மாரிடம், "ஏனம்மா, குழந்தையை தேடி போர்வைக்குள் போகிறார்கள்" என்று சீரியல் பார்க்கும் பிள்ளைகள் கேட்கும்போது எந்த மாதிரி தர்ம சங்கடம் தாய்மார்களுக்கு ஏற்படும் என்பது இயக்குநருக்கு புரியாதா?. போதாத குறைக்கு, பிரசவித்த குழந்தையை ரத்தம் படிந்த கோலத்தில் காட்டி வேறு டெரர் ஏற்றினார்கள்.

  கலாச்சார பிரளயம்

  கலாச்சார பிரளயம்

  'கல்யாணம் முதல் காதல் வரை', இயக்குநர்தான் இப்படி என்று பார்த்தால், 'சரவணன் மீனாட்சி' சங்கதியும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அங்கு ஒரு பெரும் கலாச்சார பிரளயமே நடந்து கொண்டுள்ளது. சரவணனை காதலித்த மீனாட்சியை, சந்தர்ப்பவசத்தால் திருமணம் செய்யும் வேட்டையன், தற்போது, சரவணனிடம் சேர்த்து வைக்க டிரை செய்கிறாராம்.

  கழுத்தில் தாலி, கையில் ரிங்

  கழுத்தில் தாலி, கையில் ரிங்

  தொங்க, தொங்க வேட்டையன் கட்டிய தாலியுடன் வலம் வரும், மீனாட்சியோ, தனது கையில் சரவணன் போட்ட மோதிரத்தையும் அணிந்துள்ளார். அதுமட்டுமா, "இந்த மோதிரத்தை அணிந்திருந்தால் சரவணன் என் கூட இருப்பதாகவே அர்த்தம்" என்று வியாக்கியானம் வேறு. இது என்ன மாதிரி டிசைன்?.

  கணவரை மடக்கும் கலை

  கணவரை மடக்கும் கலை

  விஜய் டிவிதான் ஏதோ புதுமாதிரி முயல்கிறது என்று நினைத்தால், இதுவரை அடக்கி வாசித்த சன்டிவி சீரியல் ஒன்றிலும், சரச சல்லாபம் எட்டிப்பார்க்கிறது. இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும், தெய்வமகள் சீரியல் வில்லி கதாப்பாத்திரம், தனது கணவனை மடக்கி கைக்குள் வைக்க என்ன செய்கிறது தெரியுமா? உடலை கவ்வி பிடிக்கும், ஜிகுஜிகு நைட்டியை அணிந்து கொண்டு, தனது தங்கையிடமே உனது மாமனை மடக்கப் போகிறேன் என்று வசனம் பேசுகிறது.

  இதுவேறு

  இதுவேறு

  மாமனை கவுக்கும்போதெல்லாம் பாலில் கலப்பாயே, அதை கலந்து விட்டாயா என்று கேட்டு பாலை வாங்கிக் கொண்டு அந்த பெண் கேரக்டர் பெட்ரூம் செல்கிறது. நல்லவேளை மேற்கொண்டு எதுவும் அசம்பாவிதம் நடக்காமல், பார்ப்பவர் வயிற்றில் பால் வார்க்கப்பட்டது. அதே சீரியலில் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து சாப்பிடும் ஆசாமி கேரக்டர், அடிக்கடி மனைவியை உறவுக்கு அழைப்பது போன்ற காட்சி வேறு.

  சீரியலுக்கும் சென்சார்?

  சீரியலுக்கும் சென்சார்?

  ஏற்கனவே, மானாட மயிலாட, ஜோடி நம்பர்-1 போன்ற ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கலந்து விட்டதாக சர்ச்சை எழுந்திருந்தது. தற்போது சற்று அடக்கி வாசித்து ஆடிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சிறுவர் முதல் முதியவர் வரை ஒன்றாக அமர்ந்து பார்க்கும் சீரியலிலும் ஆபாசத்தை கலக்கலாமா? சின்னத்திரைக்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் முன்பு, தாங்களே தரத்தை மேம்படுத்திக்கொள்ள முயல வேண்டியது சீரியல் இயக்குநர்களின் கடமை.

  English summary
  Tamil tv serials features dirty and vulgar scenes nowadays which is highly object by the general viewers.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X