இயக்குநர் மகேந்திரன் மறைவின் போது ரஜினி செய்த அந்த விஷயம்.. இந்த அளவுக்கு சென்சிட்டிவான மனுசனா?
சென்னை: தமிழ் சினிமாவின் அடையாளங்களில் பெருமைமிகு முகமாக மறைந்த இயக்குநர் மகேந்திரனைக் கூறலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ஸ்டைல் என்று இருந்த ஸ்டீரியோ டைப்பை உடைத்து, ரஜினி என்றால் பிரமாதமான நடிப்பும் தான் என்ற பிம்பத்தை உருவாக்கியது இயக்குநர் மகேந்திரனின் படங்களான, முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்கள் தான். இந்த படங்கள் சூப்பர் ஸ்டாரின் திரை வாழ்க்கையில் காலத்திற்கும் பேசப்படும் படங்களாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு காலத்திற்கும் நின்று பேசும் படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரனின் மறைவின்போது ரஜினி செய்த விஷயம் மற்ற யாருமே செய்யாதது என்று, இயக்குநரும், இயக்குநர் மகேந்திரனின் மகனுமான ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில், " அப்பா மரண படுக்கையில் இருக்கிறார். அவருக்கே தெரிகிறது இன்னும் ஒரு வாரத்தில் இறந்து விடுவேன் என்று. இதை உணர்ந்து கொண்ட அவர் உடனே சொன்ன விஷயங்கள் என்னவென்றால், அதைக் கேட்கவே எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தான் மரணித்து விட்டால் பலரும் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வருவார்கள், வருபவர்கள் ஒரே வழியாக வந்து, அதே வழியாக திரும்பிச் செல்வது என்பது சிரமமான காரியம், எனவே வீட்டின் இன்னொரு கதவையும் திறந்து வைய்யுங்கள் என்று கூறினார்.

கடைசி வருத்தம்: மேலும் வீடு முழுவதும் புத்தர் சிலைகள் உள்ளது. இந்த புத்தர் சிலைகள் எல்லாம் இப்படியே இருந்தால், துக்கம் விசாரிக்க வருபவர்கள் கை, கால்கள் பட்டு அந்த சிலைகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சிலைகளை எல்லாம் வீட்டின் மாடியில் எடுத்து வைத்து விடுங்கள் என்று கூறினார். மேலும், துக்கம் விசாரிக்க வருபவர்கள் எல்லாம் செருப்பு கால் உடனே வீட்டுக்குள் வருவார்கள். அதன் பின்னர் அந்த குப்பைகளை நீங்கள் எல்லாம் எப்படி சுத்தம் செய்யப் போகிறீர்கள் என்று நினைக்கும்போது தான் கஷ்டமாக உள்ளது என்றார்.
ரஜினி செய்த அந்த விஷயம்: அப்பா சொன்ன அந்த நாள் வந்தது. அப்பா சொன்னதைப்போல துக்கம் விசாரிக்க வந்த அனைவரும் செருப்பு காலுடனே நேராக வீட்டிற்குள் வந்தார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. சூழல் அப்படி, மற்றவர்கள் செருப்பு காலுடன் வீட்டுக்குள் வந்ததை நான் தவறு என்றும் சொல்லவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் தான் வீட்டிற்குள் வருவதற்கு முன்னர் தனது செருப்பை கழட்டி வைத்துவிட்டு உள்ளே வந்தார். அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி சாருக்குத் தெரியும், அப்பாவுக்கு செருப்பு காலுடன் வீட்டிற்குள் வருவது பிடிக்காது என்பது.

ரஜினி உருக்கம்: அதனால் தான் அவர் செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு வந்தார். மேலும் உள்ளே வந்தவர், அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்து எனது ஹீரோ, எனது ஹீரோ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி தொடர்பான துணுக்கு வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











