ரஜினியின் நண்பருக்கு கண்டிஷன் போட்ட இயக்குநர்.. உடனே கண்டித்த சூப்பர் ஸ்டார்.. தங்கமான மனுஷன்யா!
சென்னை: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக கமலுடன் இணைந்து நடிக்கவிருக்கும் படம்தான் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை யார் இயக்குவார் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. அதேசமயம் அதுதான் கடைசி படம் என்று வெளியாகும் தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் படையப்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பார்க்கலாம்.
ரஜினி தனது வாழ்க்கையில் மறக்காதவர்களில் ஒருவர் அவரது நண்பர் ராஜ் பகதூர். இரண்டு பேரும் போக்குவரத்து துறையில் வேலை பார்க்கும்போது நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தார்கள். இன்னமும் திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசைக்கு பக்கபலமாக இருந்தவர் ராஜ் பகதூர்தான். அதனை ரஜினியும் பல மேடைகளில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இப்போதும் பெங்களூரு சென்றால்: உச்சத்துக்கு சென்றால் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு உதவியவர்கள், தங்களுடன் பழகியவர்களை மறந்துவிடுவார்கள். ஆனால் ரஜினி அப்படி இல்லை. அப்படி இல்லாததுதான் அவர் இன்னமும் உச்சத்தில் இருப்பதற்கு காரணம். இப்போதும் பெங்களூருவுக்கு சென்றால் ராஜ் பகதூரை சந்திக்காமல் திரும்பமாட்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் பகதூரும் தகுதியானவர்தான்: ரஜினி இப்படி மரியாதையும், பாசமும் வைத்திருப்பதற்கு ராஜ் பகதூரும் தகுதியானவர்தான். தனக்கு ரஜினியுடன் இருக்கும் நெருக்கத்தை எப்போதும் மிஸ் யூஸ் செய்ததே இல்லை அவர். மேலும் அவர் பற்றிய சர்ச்சைகள் எது வந்தாலும் ராஜின் ரியாக்ஷன் எப்போதுமே சைலெண்ட்டாகத்தான் இருக்கும். ஆர்வமிகுதியிலோ, உணர்ச்சி பெருக்கிலோ வார்த்தை எதையும் விடாமல் இருப்பது ஆரோக்கியமான ஒன்றே.
படையப்பாவில் ராஜ் பகதூர்: ரஜினி பட ஆடியோ வெளியீட்டு விழா, வெற்றி விழா என எதுவாக இருந்தாலும் அங்கு பகதூருக்கு ஒரு சீட் இருக்கும். அதேபோல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த மெகா ஹிட் படமான படையப்பாவில் ராஜையும் நடிக்க வைத்திருந்தார் ரஜினி. இந்நிலையில் அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த சுவார்ஸ்யமான சம்பவத்தை அவர் பகிர்ந்துகொண்ட வீடியோ ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன வீடியோ: அவர் அளித்த ஒரு பேட்டியில், "படையப்பா படத்தின் ஷூட்டிங் பார்ப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது ரஜினியின் நண்பர் கேரக்டரில் நடிக்க ஒருவர் தேவைப்பட்டார். உடனே ரஜினி என்னிடம் நீயே நடி என சொன்னார். அய்யோ அதெல்லாம் ஒத்துவராது என்று கூறினேன். ஆனால் ரஜினி விடுவதாக இல்லை. கதைப்படி, 'இவனை அரசியலுக்கு வா என்று சொன்னால் மேலே கையை காண்பிக்கிறான்' என டயலாக் சொல்ல வேண்டும்.
கண்டிஷன் போட்ட இயக்குநர்; கண்டித்த ரஜினி: அந்த டயலாக்கை நான் சொல்லும்போது, ரவிக்குமார் என்னிடம், 'ரஜினி சார் பெரிய ஸ்டார். அவரை வாடா போடா என்று சொல்ல வேண்டாம்' என கூறினார். உடனே அருகில் இருந்த ரஜினியோ, 'நோ நோ அதெல்லாம் கூடாது. நீ அப்படியே சொல் டா' என சொன்னார். பிறகுதான் நான் அப்படி டயலாக் பேசி நடித்தேன்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு ஈகோவே இல்லை; அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று சிலாகித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











