கவுண்டமணி நடிக்கவில்லையென்றால் நடிக்கமாட்டேன்.. அதிரடி காட்டிய ராமராஜன்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: ராமராஜன் ஒருகாலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். ஆனால் நளினியும், ராமராஜனும் விவாகரத்து செய்து பிரிந்தனர். சூழல் இப்படி இருக்க ராமராஜன் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது.
கோலிவுட்டில் ராமராஜன் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்தவர். மொத்தமே அவர் பீக்கில் இருந்தது என்றால் ஐந்து வருடங்களுக்குள்தான் இருக்கும். ஆனால் அந்த காலத்தில் அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. முக்கியமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு கடுமையான போட்டியை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேகூட ராமராஜனின் வெற்றியை பார்த்து ஆச்சரியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் டூ விவகாரத்து: அந்த சமயத்தில் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திடீரென இருவரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் ஜோசியம்தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் நல்லது இல்லை என்று ஜோதிடக்காரர் ஒருவர் சொன்னதாகவும்; அதனாலதான் அவர்களது விவாகரத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்த அவர் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

கலவையான விமர்சனங்கள்: படம் கடந்த வருடம் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. இதற்கிடையே ராமராஜனின் திரையுலக வாழ்க்கையை புரட்டிப்போட்ட படம் என்றால் அது கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கியிருந்த அந்தப் படம் தில்லானா மோகனாம்பாள் ஜானரில்தான் உருவாகியிருந்தது. ஆனால் அதில் விஷேஷம் என்னவென்றால் இதில் எடுத்துக்கொண்ட மையக்கரு கரகாட்டம். கிராமங்கள் பக்கம் கொண்டாடப்படும் கரகாட்டத்தை கதையின் கருவாக வைத்து; ஹீரோ, ஹீரோயினை கரகாட்ட கலைஞர்களாக காண்பித்திருந்ததால் படம் மெகா ஹிட்டானது.
காமெடி அரசர்கள்: அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று கவுண்டமணி - செந்தில் காமெடி. வாழைப்பழ காமெடி சீன் உள்ளிட்டவைகள் இன்றுவரை கொண்டாட்டத்துக்குரியதாக இருக்கிறது. அந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்டு வசூலை வாரி குவித்து ஒரு வருடத்துக்கும் மேலே ஓடியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டத்திலும் கங்கை அமரன் இருப்பதாக ஒரு தகவல் ஓடியது. ஆனால் அதுகுறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வரவில்லை.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் ராமராஜன் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "கரகாட்டக்காரன் திரைப்படத்தில் தவில்காரர் கேரக்டரில் முதலில் எஸ்.எஸ்.சந்திரனைத்தான் போடுவதாக இருந்தார்கள். அப்போது அவர் வேறு கட்சியில் இருந்தார், நான் வேறு கட்சியில் இருந்தேன். அதனால் அவர் வேண்டாம் என்றேன். அதற்கு அவர்களோ ஒத்துக்கொள்ளவே இல்லை.
கவுண்டமணிதான் வேண்டும்: மேலும் நான் இது அரசியல் படம் இல்லை. கிராமத்து சார்ந்த படம். எனவே கவுண்டமணியை போடுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்கள் எஸ்.எஸ்.சந்திரன் என்பதில் உறுதியாக இருந்தார்கள். வேறு வழியில்லாமல் நான், 'சந்திரனை நடிக்க வைத்தால் என்னை விட்டுவிடுங்கள். நான் வெளியேறுகிறேன் என்று சொன்னேன். பிறகுதான் கவுண்டமணி உள்ளே வந்தார். இதனை நான் அவரிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளவில்லை. ஆனால் இந்த விஷயம் தயாரிப்பாளர்களில் ஒருவரான துரைக்கு தெரியும்" என்றார்.


Click it and Unblock the Notifications











