ஷங்கர் படத்துக்காக வைக்கப்பட்ட ஆப்பு.. படக்குழு ரொம்பவே திணறிருக்காங்க.. ஆனாலும் அசால்ட்டா முடிச்சிட்டாங்க
சென்னை: இயக்குநர் ஷங்கர் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே பிரமாண்ட இயக்குநர் ஒரு சிறிய ஹிட் கொடுக்கவே திணறிக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய கேம் சேஞ்சர், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே அவருக்கு ஒரு கெட்ட கனவாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். அடுத்ததாக வேள்பாரி நாவலை திரைப்படமாக்கவிருக்கிறார்.
ஒரு காலத்தில் ஷங்கர் இயக்கம் என்றாலே எல்லோரு கண்ணை மூடிக்கொண்டு கொண்டாடுவார்கள். அவர் தனது படங்களுக்காக பிரமாண்டத்தின் வாசலை முதன்முறையாக திறந்தவர். அதேபோல் புது புது டெக்னாலஜிகளையும் தன்னுடைய படங்களில் முடிந்த அளவுக்கு பயன்படுத்துவார். எப்படியாவது சில சீன்களிலாவது அவர் இயக்கத்தில் நடித்துவிடமாட்டோமா என்று நடிகர்கள் ஏங்கிய காலம் எல்லாம் உண்டு.
சறுக்கலில் ஷங்கர்: ரஜினி, கமல் ஆகிய இரண்டு பேருக்குமே மெகா ஹிட்டுகளை கொடுத்தவர். ஆனால் இப்போது அவருக்கு சுத்தமாக நேரம் சரியில்லை. விக்ரமை வைத்து அவர் இயக்கிய ஐ படத்திலிருந்தே சறுக்க ஆரம்பித்த அவரது மார்க்கெட்; இப்போது அதள பாதாளத்தில் இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும். கடைசியாக அவர் இயக்கிய இரண்டு படங்களுமே படுதோல்வி. அடுத்ததாக வேள்பாரி நாவலை திரைப்படமாக்கவிருக்கிறார்.
முத்துவடுகுவின் பதிவு: இந்நிலையில் ஷங்கரிடம் ஜீன்ஸ், முதல்வன் என பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய முத்துவடுகு பாய்ஸ் படத்தின்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் தனது முகநூல் பக்கத்தில், ""பாய்ஸ்" படம். ஹீரோயின் வீடு. பணக்காரத்தனமான வீடு. ஒரு காட்சியில் நிலநடுக்கம் ஏற்படும். அந்த நிலநடுக்கத்தில் அந்த வீடும் அதிர வேண்டும். செட் போடுவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதிரும்படி எப்படி போடுவது? வழக்கம்போல் நீண்ட சிந்தனைக்கு பின் முடிவு கிடைத்தது.

கிடைத்த ஐடியா: செட் போடும் தளம் முழுக்க, 100க்கும் மேற்பட்ட வலுவான ஸ்பிரிங்குகளை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். அதன் மீது பலகைகளைக் கொண்டு தளம் அமைக்கப்பட வேண்டும். அந்த தளத்தின் மீது வீடு செட் போட வேண்டும். ஸ்பிரிங் மீது வீடு நிற்பதால் நாம் நினைத்தபடி வீடு ஆடும். ஓகே....கீழே ஸ்ப்ரிங் இருப்பதால் தளம் அமைக்கும் போதும் ஆடும். வீடு செட் போடும் போதும் ஆடும். ஆடினால், செட் போட்டு முடிக்கவும் முடியாது. மேலும் நிலநடுக்கம் இல்லாத மற்ற காட்சிகளை எடுக்கும் போதும் வீடு ஆடும். அதற்கு என்ன செய்வது ?
மறுபடியும் சிந்தனை துவங்கியது. சீக்கிரமே முடிவுக்கும் வந்தது. நமக்கு தேவைப்படும் போது மட்டும் ஸ்ப்ரிங் வேலை செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் ஸ்பிரிங்கின் வேலையை தடை செய்ய வேண்டும். ஸ்பிரிங்கை மேலும் கீழும் ஆடாமல் இருக்கச் செய்ய வேண்டும். அதற்கு ஸ்பிரிங்கின் சுருளுக்கு இடையில் ஆப்புகளை சொருகி வைக்க வேண்டும். இது முடிவானது. அதன்படி தளத்தில் வலுவான நூற்றுக்கணக்கான ஸ்பிரிங் நிறுத்தி வைக்கப்பட்டது. ஸ்பிரிங்குகள் அனைத்தும் மேலும் மேலும் ஆடாமல் இருக்க ஆப்பு வைத்து இறுக்கப்பட்டது.
அதன்மேல் தளம் அமைக்கப்பட்டது. பிரம்மாண்டமான வீடு செட் கட்டி முடிக்கப்பட்டது. வீடு முழுக்க பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டது.மற்ற காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டது. முக்கியமான நிலநடுக்கக் காட்சி எடுக்கும் நாள் வந்தது. இன்று வீடு ஆட வேண்டும். வீடு ஆட ஆப்புகளை அகற்ற வேண்டும்.ஆனால் ஆப்புகளை அகற்ற முடியவில்லை.காரணம் வீட்டின் பாரம் அதிகமாகிவிட்டது ஆகவே ஆப்புவின் மீது அழுத்தம் அதிகமாகி விட்டது. என்ன செய்வது? வீட்டிற்குள் இருக்கும் மொத்த பொருட்களையும் வெளியேற்றினோம். வீட்டின் பாரத்தை குறைத்தோம். இப்பொழுது ஆப்பு எடுக்கும் நிலைக்கு வந்தது. எடுக்கத் துவங்கினோம்.
ஸ்டார்ட், கேமரா: அதிலும் ஒரு பிரச்சனை. ஒரு பக்கமாக ஆப்புகளை எடுத்தால் வீடு ஒரு பக்கமாக சாயத் துவங்கிவிடும் ஆகவே நான்கு பக்கமும் பேலன்ஸ் பண்ணியே ஆப்புகளை மெதுவாக நீக்க வேண்டி இருந்தது. முழுவதும் நீக்கி முடித்தோம். மீண்டும் பொருட்களை உள்ளே அடுக்கினோம். நடிகர்கள் நடிக்க தயாரானார்கள். நிலநடுக்கத்தின் நேரம் வந்தது. "ஷாட் கேமரா... "ரோலிங்... " "ஆக்..ஷன் "நடிக்கத் துவங்கினார்கள். செட்டைச் சுற்றி தயாராக நின்ற நாங்கள் வீட்டை ஆட்டினோம். வீட்டிற்குள் இருந்த பொருள் அனைத்தும் கீழே விழுந்து உருண்டன. நடிகர்கள் அலிறினார்கள். நிலநடுக்கம் நிஜநடுக்கம் போல் நிகழ்ந்தது .
கட். ஓடி வந்து எல்லோரும் மானிட்டரைப் பார்த்தோம்.ஒன் மோர் என்றால் மறுபடியும் பொருட்களை அடுக்கி செட்டை சரி செய்ய வேண்டும். தயாராக இருந்தோம். ஷங்கர் சார் எங்களைப் பார்த்து "ஷாட் ஓகேவா ?" என,சந்தேகத்தோடு கேட்டார். நாங்களும் ஓகே என்பது போல் தலையாட்டினோம். அவர் அவ்வளவு எளிதில் திருப்தியடையவே மாட்டார். 'மைக்'கை எடுத்தார். அவர் குரல் ஓங்கி ஒலித்தது. "ஷாட் ஓகே" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











