»   »  ஒரு பாட்டுக்கு எவ்வளவு தரப்படுகிறது ?

ஒரு பாட்டுக்கு எவ்வளவு தரப்படுகிறது ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

ஒரு திரைப்பாடலின் அளவானது பன்னிரண்டிலிருந்து இருபது வரிகளுக்குள் அடக்கம். அதற்கு மேற்பட்டு அந்தப் பாடல் இருக்க வாய்ப்பில்லை. ஒரே வரியை மீண்டும் மீண்டும் பாடுவது இதில் சேர்த்தியில்லை. பல்லவி அனுபல்லவி நான்கு வரிகள். சரணங்கள் ஒவ்வொன்றும் நான்கு நான்கு வரிகள். ஆக, மொத்தம் பன்னிரண்டு வரிகள் போதுமானவை.

'சின்ன சின்ன ஆசை...' பாடலை எடுத்துகொள்ளுங்கள். பன்னிரண்டு வரிகளுக்குள் அந்தப் பாடல் அடக்கம். இன்னும் சொல் சொல்லாக எண்ணினால் பல்லவி அனுபல்லவிக்குப் பன்னிரண்டு சொற்கள். ஒவ்வொரு சரணத்திலும் பதினாறு சொற்கள். ஆக மொத்தம் அந்தப் பாடலில் 12 + 16 + 16 = 42 வெறும் நாற்பத்திரண்டு சொற்கள். இதில் ஆசை என்னும் சொல் ஒவ்வோர் அடியிலும் ஈற்றுச் சொல்லாக முடிவது. ஆசை என்னும் அவ்வொற்றைச் சொல் மட்டுமே பன்னிரண்டு முறை இடம்பெறுகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், சின்ன சின்ன ஆசை பாடலில் இடம்பெற்ற சொற்களின் எண்ணிக்கை வெறும் முப்பத்தொன்றுதான். பன்னிரண்டு வரிகள் முப்பத்தொரு சொற்கள்.

How much paid for a lyricist?

'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் கதைத் திருப்பத்திற்கே காரணமாக இருக்கின்ற பாடல் 'வசந்தகால நதிகளி்லே வைரமணி நீரலைகள்...' என்னும் பாட்டு. அந்தப் பாடலில் காதலன் தன் காதல் கனவுகளைச் சொல்லவேண்டும். காதலி அந்தக் கனவுகளுக்கு உறுதி தரவேண்டும். அம்மகிழ்ச்சியில் திளைக்கும் காதலன் எதிர்பாராதபடி தண்ணீரில் விழுந்து இறக்க வேண்டும். அவனைக் காப்பாற்றாமல் படகில் துடுப்பு வலிக்கும் நண்பன் அங்கே தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்திப் பாடவேண்டும். இவ்வளவு திரைக்கதை உள்ளடக்கங்களைக்கொண்ட அந்தப் பாட்டுக்கு எட்டே வரிகள்தாம். இறுதியாக விசுவநாதன் குரலில் பாடும் வரிகளைச் சேர்ந்தால் மொத்தம் பத்து. பத்தே வரிகளில் கதைப்படியமைந்த மேற்காணும் சூழ்நிலைகள் அனைத்தையும் கூறிச் செல்கிறது அந்தப் பாடல்.

இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஒரு திரைப்பாடல் என்பது அந்தத் திரைக்கதையின் பிழிவாக அமைய வேண்டும். அல்லது அந்தச் சூழ்நிலையைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலாக அமைக்க வேண்டும். பயனில்லாமல் ஒரு சொல்லைக்கூட அங்கே எழுத முடியாது. இரண்டு வரிகளைக் கூடுதலாக எழுதியபின் கதைக்குத் திரும்பலாம் என்னும் புனைவின் உத்திகள் அங்கே செல்லுபடியாகாது. இரண்டு இரண்டரை மணி நேரத்தில் அங்கே எழுபது எண்பது காட்சிகளைக் காட்ட வேண்டும். பாடல்களுக்கென்று இருபது மணித்துளிகள் போய்விட்டால் மீதமிருப்பது ஏறத்தாழ நூற்றிருபது மணித்துளிகள். அவற்றில் ஒரு காட்சிக்கு இரண்டு மணித்துளிகள்கூட இல்லை. பத்து வாக்கியங்களாலான நல்ல வசனமொன்றைப் பேசுவதற்கு நாற்பது நொடிகளேனும் வேண்டும். திரைப்படத்தில் அவ்வளவு நேர நெருக்கடிகள் இருக்கின்றன. கதை நேரத்தின் ஒரு நொடியைக்கூட வீணடிக்க இயலாது. அதனால்தான் ஒரு திரைப்பாடலில் தேவைக்கு மீறிய ஒரு சொல்லோ சொற்றொடரோ இடம்பெற இயலாது.

திரைத்துறையில் இருபதாண்டுகள் உதவியாளராக இருந்த என் நண்பர் சொன்னார்... "நீங்கள் இலக்கியத்தில் ஒரு இலட்சம் சொற்களை எழுதினாலும் பத்தாயிரம் உரூபாய் ஈட்ட முடியாமல் போகலாம். ஆனால், ஒரு திரைப்படப் பாட்டுக்குப் பத்து வரிகளை எழுதிவிட்டால் போதும்... அதற்கு ஒரு இலட்சம் உரூபாய் கிடைக்கலாம்." திரைப்பாடல் எழுதவேண்டும் என்கின்ற தீராத மயக்கத்துக்கு இந்த வருமான ஈர்ப்பும் ஒரு காரணம் என்கிறார்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் கோகுலம் இதழுக்கு மரபுக்கவிதை ஒன்றை எழுதியனுப்பினேன். அந்தக் கவிதை வெளியாயிற்று. அதுதான் ஓர் இதழில் நான் எழுதி வெளியான முதல் கவிதை. மதிப்புத் தொகையாக 'பதினைந்து உரூபாய்' அனுப்பினார்கள். தொண்ணூறுகளில் குமுதம் இதழின் ஆசிரியராக எழுத்தாளர் சுஜாதா இருந்தபோது என்னிடம் சில கவிதைகளைக் கேட்டுப் பெற்று வெளியிட்டார். குமுதத்தில் வெளியான அக்கவிதைகளுக்கு நூற்றைம்பது உரூபாய் கிடைத்தது.

அதன்பிறகு தீபாவளி மலர்களுக்குக் கவிதை கேட்டார்கள். தீபாவளி மலர்களில் வெளியாகும் கவிதைகளுக்கு ஆயிரத்தைந்நூறு உரூபாய் தந்தார்கள். பதினைந்து நூற்றைம்பது ஆகி ஆயிரத்தைந்நூறு ஆகியிருக்கிறது. கவிதை எழுதினால் கிடைக்கின்ற காசு இவ்வளவே. தீபாவளி மலர்க்காரர்கள் சிலர் இன்றும் கவிதைகளுக்கு முந்நூறோ ஐந்நூறோதான் தருகிறார்கள். ஆனந்த விகடன் பவளவிழாக் கவிதைப் போட்டியில் என் கவிதையொன்றுக்குப் பரிசு கிடைத்தது.

'வாழ்ந்து கெட்டவனின்

பரம்பரை வீட்டை

விலை முடிக்கும்போது

உற்றுக்கேள்

கொல்லையில்

சன்னமாக எழும்

பெண்களின் விசும்பலை'

என்பது அக்கவிதை. அதற்குப் பரிசாக ஐயாயிரம் உரூபாய் கிடைத்தது. என் கவிதைத் தொகுப்புகள் இரண்டு 'பாரத ஸ்டேட் வங்கி'யின் இலக்கிய விருதுகளைப் பெற்றன (1996 & 2001). அவற்றில் இரண்டு ஐயாயிரங்கள் பரிசுப் பணம் கிடைத்தது. கவிதை எழுதி நான் ஈட்டியவை இவ்வளவுதான்.

இதுவரை ஏறத்தாழ இரண்டாயிரம் கவிதைகள் எழுதியுள்ளேன். கவிதை சார்ந்து முப்பதாண்டுகள் ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறேன். கவிதையால் பொருளீட்டி வாழ வேண்டும் என்னும் நிலைமை எனக்கு ஏற்பட்டிருப்பின் என்னால் இவ்வுலகில் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? அதனால்தான் கவிதை எழுதத் தொடங்குபவர்கள் திரைப்பாடல்களை எழுத விரும்புகிறார்கள். அதில் வருமானம் ஈட்டினால் ஒரு கவிஞனாக வாழ்ந்துவிடலாம் என்பது அவர்கள் கனவு.

இன்றைக்கு எழுதத் தெரிந்தவர்கள் எழுத்தைக்கொண்டே வாழ வேண்டுமானால் அவர்கள் முன்னே இரண்டே இரண்டு வாய்ப்புகள்தாம் உள்ளன. ஒன்று பத்திரிகை / ஊடகத்துறையில் பணியாற்ற வேண்டும். இல்லையேல் திரைப்படங்களில் / தொலைக்காட்சிகளில் எழுத வேண்டும். ஆசிரியராகவோ பேராசிரியராகவோ ஆவதற்குரிய வாய்ப்புகள் இன்றைய சூழ்நிலையில் மிகக்குறைவு. உதவிப் பேராசிரியர் பணிக்கு முப்பது இலட்சங்கள் கையூட்டுத் தொகையாகப் பெறுகின்ற பல்கலைக்கழகத் துணைவேந்தரைச் செய்தியில் பார்க்கிறோம்.

How much paid for a lyricist?

கண்ணதாசன் பாட்டெழுதத் தொடங்கிய காலத்தில் ஒரு பாட்டுக்கு இருநூறு கொடுத்திருக்கிறார்கள். படத்தின் கதை உரையாடலை எழுதிக்கொடுத்தால் இரண்டாயிரம் தருவார்களாம். (சான்று: பஞ்சு அருணாசலத்தின் திரைத்தொண்டர் நூல்) தங்கம் ஒரு பவுன் அறுபத்தைந்து உரூபாய்க்கு விற்ற அக்காலத்தில் ஒரு பாட்டுக்கு மூன்று பவுன் மதிப்பிலான தொகை கிடைத்திருக்கிறது. இன்றைய மதிப்பில் எழுபதாயிரம் உரூபாய். நல்ல தொகைதான். கேபி சுந்தராம்பாளுக்குத் தரப்பட்ட ஒரு இலட்சம் ஒரு நடிப்புக் கலைஞர்க்குத் தரப்பட்ட முதற்பெருந்தொகை. அவ்வாறே மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பாரதிதாசனுக்குத் தரப்பட்ட நாற்பதாயிரம்தான் இத்தமிழ்த்திருநாட்டில் கவிஞரொருவர் பெற்ற பெருந்தொகையாக இருக்க வேண்டும். ஆனால், அந்த நாற்பதாயிரத்தையும்
முழுதாய்ப் பெறாமல் இடையிலேயே அவர் முறித்துக்கொண்டு வந்தார் என்பதுதான் துயரம்.

பாடலாசிரியர்க்குத் தரப்பட்ட இருநூறு அறுபதுகளில் ஐந்நூறாகியிருக்கிறது. அடிமைப்பெண் எடுக்கப்பட்டபோது பாடகர் ஆயிரத்தைந்நூறு கேட்டுள்ளார். அதன் பிறகு பாடலுக்கும் ஆயிரம் தரப்பட்டது. எண்பதுகளில் பாட்டுக்கு ஐயாயிரம் கிடைத்திருக்கிறது. பாக்கியராஜ் படங்களுக்குப் பாடல் எழுதச் சென்றால் தமக்கு என்ன கிடைக்கும் என்று வாலி கூறியிருக்கிறார்: "முதல்ல பூர்ணிமா ஒரு நல்ல டிபன் கொடுப்பாங்க... பாட்டு எழுதி முடிஞ்சதும் கவர்ல வெச்சு ஐயாயிரம்..."

எண்பதுகளில் தரப்பட்ட அந்த ஐயாயிரம் தொண்ணூறுகளில் பத்தாயிரம் ஆனது. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் முப்பதாயிரம் தரப்பட்டது. இன்றைக்கு முதல்நிலைப் பாடலாசிரியர்கள் பெரிய படங்களுக்கு ஒன்றரை இலட்சம்வரை வாங்குவதாகக் கேள்விப்படுகிறேன். இது எவ்வளவுக்கு உண்மை என்பதும் தெரியாது. ஓர் இசையமைப்பாளரின் நிலையக் கலைஞரைப்போல் ஒரு பாடலாசிரியர் அவருடனிருந்து பணியாற்றினால்தான் தொடர்ந்து பாடல்கள் எழுத முடியும். குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கும். ஆனால், இன்று ஓர் இசையமைப்பாளரின் நிரந்தர இடம் தகர்ந்துவிட்டது. முதலில் நூற்றுக்கணக்கான பாடகர்கள் வந்தார்கள், பிறகு நூற்றுக்கணக்கான பாடலாசிரியர்கள் வந்தார்கள், இப்போது நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களும் வந்துவிட்டார்கள்.

பாடலின் அளவு குறித்துத் தொடங்கிய இக்கட்டுரை பாடலின் பொருளீட்டல் குறித்துச் சென்றது. இவர் என்ன தருகிறார், அதற்கு அவர்கள் என்ன தருகிறார்கள் என்கின்ற தெளிவை ஊட்டுவதே நோக்கம். ஒரு பாடலின் நாற்பது ஐம்பது சொற்கள் ஈட்டித் தரும் வருமானம்தான் பலர்க்கும் ஈர்ப்பாக இருக்கிறது என்பதை நிறுவத்தான் அதில் தொடங்கி இங்கு வந்தேன். இன்றைக்கு எதற்கும் சந்தை மதிப்பில்லை. வெற்றிக்குரிய உறுதிகளும் முன்னெப்போதுமில்லாத தடுமாற்றங்களோடு இருக்கின்றன என்பதே உண்மை.

English summary
How much paid for a lyricist? Here is Poet Magudeswaran's experience

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil