twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்

    |

    சென்னை: கவியரசர் கண்ணதாசனின் 37 வது நினைவுநாள் இன்று.

    கண்ணதாசன் ஏன் கவியரசர் என அழைக்கப்படுகிறார் என்பதை ஆராய்ந்தால் பல ஆச்சர்ய உண்மைகள் புலப்படுகின்றன.

    நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தை இல்லாதோருக்கு குழந்தையை சுவீகரம் செய்து கொடுக்கும் வழக்கம் காரைக்குடி செட்டிநாட்டில் இருந்தது. சாத்தப்பன், விசாலாட்சிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த கண்ணதாசன் அப்படித்தான் பழனியப்பன், சிகப்பி தம்பதிக்கு சுவீகாரம் கொடுக்கப்பட்டார்.

    [ஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...]

    கலங்காதிரு மனமே

    கலங்காதிரு மனமே

    1949 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னியின் காதலி திரைப்படத்தில் தான் முதன் முதலில் பாட்டெழுதினார் கண்ணதாசன். "கலங்காதிரு மனமே.. உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே.." என்று அவரின் பேனா எழுதிய வரிகள் அவருடைய சென்னை வாழ்க்கையை காட்சிப்படுத்தியது. கதை எழுதும் ஆர்வத்தோடு 16 வயதில் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்த கண்ணதாசனுக்கு அடைக்கலம் கொடுத்தவை மெரினா கடற்கரையும், திருவற்றியூர் பட்டினத்தார் கோவிலும்தான். வாய்ப்புத் தேடிய வயதில் கலங்கிய மனதுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அப்பாடலை அமைத்துக்கொண்டார்.

    குடி

    குடி

    கண்ணதாசன் என்றாலே நன்றாக குடிப்பார் என்பார்கள். குடியை பிரதானப்படுத்தும் பாடல் ஒன்றுகூட, "கண்ணதாசன் காரைக்குடி பேரைச் சொல்லி ஊத்திக்குடி" என ஆரம்பிக்கும். ஆனால் உண்மையில் கண்ணதாசன் பாடல் எழுதும்போது குடிக்க மாட்டாராம். தன் வாழ்வில் கடந்த அழகிய தருணங்களையும் கடினமான தருணங்களையும் அசைபோட்டு இசையாக்கவே குடித்தார் என்கின்றனர்.

    எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    கலைஞருடன் பழக்கம் ஏற்பட்டு திராவிட இயக்கத்தில் ஈடுபட ஆரம்பித்த பிறகு திராவிடச் சிந்தனைகள் மேலோங்கிய பாடல்கள் அதிகம் எழுதினார். அதில் எம்ஜிஆருக்கும் எப்போதும் பிடித்த பாடல் என்றால், அது மன்னாதி மன்னன் படத்தில் வரும் "அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா.." என்பதுதான். காட்சிக்காக சூழலை மட்டும் வைத்து பாடலை எழுதாமல் படத்தின் முழுக்கதையையும் கேட்டு அதை பாடலில் பிரதிபலிக்க முயற்சிப்பார் கண்ணதாசன்.

    மனித வாழ்க்கை

    மனித வாழ்க்கை

    சிவாஜிகணேசன் விரக்தியின் விளிம்பில் இருக்கும் பாலும் பழமும் படத்தில் வரும், போனால் போகட்டும் போடா...பாடல், பாசமலர் படத்தில் வரும் "மலர்ந்தும் மலராத பாதி மலராக" பாடல் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆலயமணி படத்தில் வரும் சட்டி சுட்டதடா பாடலில் வரும் வரிகள் போன்று வாழ்க்கையின் விளிம்பில் இருக்கும் ஒருவரின் வலியை கொடுத்த பாடல் உண்டா?

    "எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா

    நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா"

    மனித வாழ்வியலின் அடிப்படைத் தத்துவத்தை நான்கே வரிகளில் கொடுத்த தீர்க்கதரிசி கண்ணதாசன் என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை.

    காமராஜர்

    காமராஜர்

    எல்லோரும் ஒரு கம்பர்ட் சோனுக்கு வந்தபிறகு ஆணவத்தில் அடுகிறார்கள். அது நியாயமில்லை என்பதை உரக்கச் சொன்ன பாடல்தான் முத்துராமன் ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி படத்தில் இடம்பெற்ற " பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா" பாடல். ஈவிகே சம்பத் திமுகவிலிருந்து விலகி, தமிழ் தேசியக் கட்சி எனும் கட்சியைத் தொடங்கிய காலத்தில் அக்கட்சியில் சம்பத், நெடுமாறன், கண்ணதாசன் என மூவர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணையுங்கள், காமராஜரிடம் பேசுங்கள் என சிலர் அறிவுறுத்தியபோது காமராஜரிடம் நேரடியாகப் பேசத் தயங்கிய கண்ணதாசன் பூடகமாகச் சொல்ல விரும்பி எழுதிய பாடல்தான் பட்டிணத்தில் பூதம் திரைப்படத்தில் வரும் "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி" பாடல் என ஒரு பேச்சு உண்டு. இப்படி அவரைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களை பாடலில் புகுத்தியிருக்கிறார்.

    இளையராஜா

    இளையராஜா

    கேவி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி இளையராஜா என மிகப்பெரிய ஆளுமைகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் கண்ணதாசன். திராவிட சிந்தனையில் செயல்பட்ட கண்ணதாசன் இந்து மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை பறைசாற்றும் விதமாக அர்த்தமுல்ல இந்து மதம் நூலை எழுதினார். அதே கண்ணதாசன் தான் மதவேற்றுமை பாராமால் ஏசு காவியமும் தீட்டினார். இவரளவுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்க்கை சுயசரிதை எழுதியவர்கள் இருக்க முடியாது. அன்னக்கிளி படத்திற்கு இளையரஜா இசையமைக்கும்போது கவியரசர்தான் பாடல் எழுதவேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அது முடியாமல் போனது, பிறகு பதினாறு வயதினிலே படத்தில் பாடல் எழுதினார். தன் மீது அளவுகடந்த பற்றும் மரியாதையும் வைத்திருந்த இளையராஜாவிடம், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.. என்னோட கடைசிப் பாட்டு உனக்குத்தான் என்றாராம். சொன்னபடியே அதுவும் நடந்தது. மூன்றாம் பிறைப் படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல்தான் கடைசிப்பாடலாக அமைந்தது.

    வியப்பு

    வியப்பு

    தன் வாழ்க்கையின் அனுபவங்களின் மூலம் மனித வாழ்வியலை அளவிட்ட மகா தீர்க்க தரிசி கண்ணதாசன் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் "மரணத்தை இறைவன் ரகசியமாய் வைத்திருப்பதால்தான் மனிதன் ஓரளவாவது மனிதாபிமானத்தோடு நடந்துகொள்கிறான்" என அவர் மேடையில் உதிர்த்த வார்த்தைகள். ஆனால் அந்த ரகசியத்தையும் அறிந்துகொண்ட மகா ஞானியாகவே கண்ணதாசன் மறைந்திருக்கிறார் என்பதுதன் வியப்பின் மீதுள்ள ஆச்சர்யம்.

    English summary
    Kaviyarasar Kannadasan 37th death anniversary today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X