For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திரைத்தொண்டரின் பார்வையில் கண்ணதாசன்!

By Shankar
|

- கவிஞர் மகுடேசுவரன்

பஞ்சு அருணாசலத்தின் தன்வாழ்க்கைக் கட்டுரைகள் அடங்கிய 'திரைத்தொண்டர்' என்ற நூலைப் படித்தேன். விகடன் வெளியீடு. முந்நூற்றூக்கு அருகிலான பக்கங்களையுடைய அந்நூலால் நாற்பதாண்டுத் தமிழ்த் திரையுலகின் குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளர் ஆவதற்கு முன்னர் ஏ எல் சீனிவாசனிடம் அரங்கப்பொருளறை உதவியாளராக இருந்திருக்கிறார். அங்கிருந்து தொடங்கிய அவருடைய திரைப்பட வாழ்க்கை மாயக்கண்ணாடி என்னும் தோல்விப் படத்தோடு முடிகிறது.

இதற்கிடையில் அவர் திரைத்தொழிலில் அடைந்த ஏற்றத்தாழ்வுகளும் நதிமூலத்தை உணர்த்தும் பற்பல செய்திகளும் விழிவிரிய வைக்கின்றன. எழுபது எண்பதுகளில் கோலோச்சிய எண்ணற்ற முதனிலைக் கலைஞர்களைத் திரைத்துறைக்கு வழங்கியவர் அவர். இளையராஜா என்கின்ற ஒரே பெயர் போதும். அந்நூலில் அவர் கூறியவற்றிலிருந்தும் கூறாமல் இடைவெளி விட்டவற்றிலிருந்தும் வரிகளின் இடையொளிவுகளிலிருந்தும் கலைத்துறைச் செய்திகள் ஏராளமானவற்றை உணரலாம். பஞ்சு அருணாசலத்தின் சொற்களில் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி நன்கு அறிய முடிகிறது.

Kannadasan in the view of Panchu Arunachalam

கண்ணதாசனின் தமயன் ஏ எல் சீனிவாசன் சென்னையில் படப்பிடிப்புக் கூடம் அமைத்து திரைத்தொழிலில் வெற்றி பெற்றவர். சிவாஜி, பானுமதியை வைத்து அம்பிகாபதி திரைப்படத்தை எடுத்தவர் அவர்தான். குடும்பத்தின் போதாநிலை காரணமாக கல்லூரிப் படிப்பை இடைநிறுத்திக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார் பஞ்சு அருணாசலம். படப்பிடிப்புக் கூடத்தின் அரங்கப்பொருளறைப் பொறுப்பு அவர்க்குத் தரப்பட்டது. அரங்கு அமைப்பதற்குரிய பொருள்களை எடுத்துக்கொடுத்துவிட்டு மீத நேரத்தில் அரங்குக்குள் கிடந்து பிற வேலைகளை உடனிருந்து கற்பதில் ஈடுபாடு. சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களை அருகிருந்து பார்க்கிறார். வேலை முடிந்தவுடன் மாலை ஐந்து மணிக்குமேல் தேனாம்பேட்டையில் இருக்கும் இன்னொரு சிற்றப்பாவான கண்ணதாசனின் தென்றல் இதழ் அலுவலகத்திற்குச் சென்றமர்கிறார். அப்போது தென்றல் (கண்ணதாசன்), முரசொலி (கருணாநிதி), மன்றம் (நெடுஞ்செழியன்), தென்னகம் (மதியழகன்), தனியரசு (ஆசைத்தம்பி) ஆகிய இதழ்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவற்றின் ஆசிரியர்கள் ஒருவர்க்கொருவர் நண்பர்கள். அடிக்கடி அளவளாவிகள். தென்றல் உதவியாசிரியர்கள் தென்னரசும் தமிழ்ப்பித்தனும் பஞ்சு அருணாசலத்தை அலுவலகத்தைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்கள். தலையங்கம் சொல்வதற்கு அப்போது கண்ணதாசன் வந்துவிட்டார். யாருமில்லாததால் தாம் சொல்ல சொல்ல எழுதுவாயா என்று பஞ்சு அருணாசலத்தைக் கேட்க, அவரும் சரியென்கிறார். கண்ணதாசன் சொல்ல சொல்ல பிழையில்லாமல் முத்து முத்தான கையெழுத்தில் எழுதித்தருகிறார். "அடடே... உன் கையெழுத்து முத்து முத்தா இருக்கே... நாளையிலிருந்து என்கூட வந்துடு...," என்று கூறிச் செல்கிறார்.

Kannadasan in the view of Panchu Arunachalam

இதுதான் பஞ்சு அருணாசலம் கண்ணதாசனிடம் உதவியாளராகிய கதை. கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்த ஆண்டு ஐம்பதுகளின் நடுப்பகுதி. இரண்டு குடும்பங்கள், தென்றல் இதழ், கட்சி ஈடுபாடு என்று கடும் போராட்டத்தில் இருந்துள்ளார் கண்ணதாசன். தஞ்சை இராமையாதாஸ் என்பவர்தான் முன்னணிப் பாடலாசிரியர். மற்றவர்கள் இரண்டாம் நிலையில் ஓரிரண்டு பாடல்கள் எழுதி வந்துள்ளனர். ஒரு பாட்டுக்கு இருநூறு, கதை வசனம் எழுதிக்கொடுத்தால் மூவாயிரம் கிடைக்கும். இவ்வளவுதான் வாய்ப்பு. அப்போது எம்.ஜி.ஆருக்கு முப்பத்தைந்தாயிரம், சிவாஜிக்கு முப்பதாயிரம். இதுதான் சம்பள நிலவரம். எல்லார்க்குமே போராட்டமான வாழ்க்கைச்சூழல்தான். இதற்கிடையில் படப்பிடிப்புத் தளத்தின் பொறுப்பான வேலையைவிட்டு உறுதியில்லாத நிலையில் போராடிக்கொண்டிருக்கும் கண்ணதாசனிடம் அவர் உதவியாளராகச் சேர்ந்தது வாழ்க்கையையே மாற்றியமைத்த தற்செயல் முடிவு என்கிறார் பஞ்சு அருணாசலம். கதைகள் பாடல்கள்மீது அவர்க்கிருந்த விருப்பமே இம்முடிவை எடுக்க வைத்திருக்கிறது.

Kannadasan in the view of Panchu Arunachalam

கவிஞர் சொல்ல சொல்ல அவர் எழுதிய முதல் பாடல் "பிறக்கும்போதும் அழுகின்றாய்... இறக்கும்போது அழுகின்றாய்...!". அப்போது கவிஞர் கவலையில்லாத மனிதன் படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். முன்னதாக அவர் எடுத்த மாலையிட்ட மங்கை என்ற படம் வெற்றி பெற்றது. கண்ணதாசன் தம்மோடு மூவரைக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டு ஆளுக்குப் பத்தாயிரம் முதலிட்டுத் தொடங்கிய படம் அது. அவருடைய அண்ணன் ஏ எல் சீனிவாசனே அந்தப் படத்தை இரண்டரை இலட்சத்திற்கு வாங்கி வெளியிட்டார். அந்தப் படத்தினால் டி ஆர் மகாலிங்கத்திற்குச் சந்தை மதிப்பேற்பட்டு அவர் பெரும் பொருளீட்டுகிறார். ஆனால், அடுத்து வந்த சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் ஆகிய படங்கள் தோல்வியுறுகின்றன. இடையில் சிவாஜியின் படத்திற்குப் பாடல் எழுத கவிஞரை அழைப்பதில்லை. அப்போது கவிஞரும் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார்கள். ஆனால், சிவாஜி 'கடவுள் கதைப்படங்களில்' நடிப்பது கட்சியினரிடையே இகழ்ச்சிப் பொருளாகிறது. சிவாஜியோ தொழில் வேறு, கட்சி வேறு என்கிறார். திருப்பதிக்குச் செல்கிறார் சிவாஜி. அதுவும் பேசுபொருளாக கட்சியைவிட்டு வெளியேறிவிட்டார். அந்நேரத்தில் திரைப்படச் சுவரொட்டியொன்று சிவாஜி புதைகுழியில் இருப்பதைப்போன்று வெளியாகிறது. அந்தப் படத்தைப் பயன்படுத்திய கண்ணதாசன், "சிவாஜிகணேசா.. இதுதான் உன் எதிர்காலமா?" என்று எழுதிவிட, இருவர்க்கும் பகையாகிவிட்டது. அதனால் சிவாஜி படங்களுக்குக் கவிஞர் எழுதுவதற்கு அழைப்பில்லை.

வேலுமணி தயாரித்த பாகப்பிரிவினை படத்திற்குக் கண்ணதாசன் பாட்டெழுதினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் பீம்சிங் விருப்பப்பட்டார். சிவாஜி படத்துக்குக் கண்ணதாசனை எப்படி அணுகுவது ?

"நான் பார்த்துக்கிறேன்... என்கிட்ட விட்ருங்க..." என்று எடுத்த செயலை முடித்துக் காட்டுவதில் வல்லவர் வேலுமணி. கவிஞரை அணுகியபோது அவர் பிடிகொடுக்கவில்லை. உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் "எப்படியாவது கவிஞரைச் சம்மதிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு...!" என்று காது கடித்துவிட்டுச் செல்கிறார்.

Kannadasan in the view of Panchu Arunachalam

உகந்த நேரம் பார்த்து கவிஞரிடம் "அவர்களாகத்தானே கூப்பிடுகிறார்கள்...? நாம் எழுதினால் என்ன தப்பு ?" என்று கேட்கிறார்.

"இல்லடா... சிவாஜிக்குத் தெரிந்து வேணாம்னுட்டா அசிங்கமாயிடும்..." என்கிறார் கவிஞர்.

"சிவாஜி அப்படிச் சொல்லமாட்டார். அப்படிச் சொன்னால் இயக்குநர்க்கும் தயாரிப்பாளர்க்கும் சேர்த்தே சங்கடமாகிவிடும்... அதனால் நாம் எழுதலாம்..." என்று தூண்டிவிட, கவிஞர் ஒப்புக்கொள்கிறார்.

Kannadasan in the view of Panchu Arunachalam

பாகப்பிரிவினையின் பாடல்கள் உருவாகின்றன. அதற்கடுத்து பாசமலர். அந்தப் பாடல்களைக் கேட்ட சிவாஜிகணேசன் நேர்ச் சந்திப்பில் உணர்ச்சியும் அழுகையுமாக, "கவிஞன்டா நீ... சரஸ்வதி உன் நாக்கில் விளையாடுறாடா...," என்று கட்டியணைத்துக்கொண்டாராம். அன்று முதல் தொடர்ந்த சிவாஜி கண்ணதாசன் கூட்டணி தமிழ்த் திரையின் ஆகச்சிறந்த பாடல்களைத் தந்தது.

கண்ணதாசன் பணத்தைத் தொடமாட்டார். பஞ்சு அருணாசலத்திடம்தான் கையிருப்பு இருக்கும். சம்பளமாக எதுவுமில்லை என்றாலும், "வேண்டியதை எடுத்துக்கடா...," என்றே கண்ணதாசன் கூறியிருக்கிறார். எதையும் மனத்தில் வைத்துக்கொள்ளாதவராக, கள்ளங் கபடமில்லாதவராக கண்ணதாசன் பஞ்சு அருணாசலத்தால் புகழப்படுகிறார்.

மதுவிருந்து ஒன்றில் வாய்ப்பேச்சு முற்றியதால் இயக்குநர் ஸ்ரீதர் சினந்து வெளியேறுவிட, உள்ளே சென்று பார்த்தால் உள்ளே கவிஞர் ஏதுமறியாதவராக அமர்ந்திருக்கிறார். "நான் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசறேனாம்... சாரின்னுட்டு எந்திரிச்சுப் போய்ட்டான்டா..." என்றிருக்கிறார். ஆனால், அதற்குப் பின்னால் கவிஞர் பாடல்கள் எழுதிய படம்தான் காதலிக்க நேரமில்லை!

English summary
Poet Magudeswaran's article on Panchu Arunachalam and Poet Kannadasan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more