twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைத்தாய் ஈன்றெடுத்த மூத்த பிள்ளை சிவாஜி கணேசனுக்கு இன்று 90வது பிறந்தநாள்

    |

    சென்னை: கலை என்ற அமிர்தத்தை ஆட்கொண்ட ஆளுமை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று.

    இந்த உலகை விட்டு சென்றாலும், ரசிகர்களின் மனதில் இன்றும், என்றும் வாழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாள் இன்று. எத்தனை நடிகர்கள் வந்தாலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

    அப்படிப்பட்ட கலைத்தாயின் தலைமகனை அவரது பிறந்தநாள் அன்று நினைவுகூர்வோமாக.

    [ கெரியரை நாசம் பண்ணிட்டார், சும்மா இருக்க மாட்டேன்: காலா வில்லன் பற்றி குமுறும் நடிகை ]

    கலைத்தாய்

    கமல்ஹாசனைப் பொருத்தவரை தான் ஆசைப்பட்டது சிவாஜியின் நாற்காலிக்குத்தான் என்று அடிக்கடி சொல்வார். சினிமாவில் சிவாஜிகணேசனின் இடத்தை நிரப்ப வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள், இதை பல மேடைகளில் அவர் சொல்லியிருக்கிறார். கமல்ஹாசனின் ஐம்பதாண்டு திரைக்கொண்டாட்டத்தில் ரஜினி பேசும்போது, " எங்களையெல்லாம் கையைப் பிடித்து கூட்டிவந்த கலைத்தாய்... கமல்ஹாசனை மட்டும் தோளில் தூக்கி நெஞ்சோடு வைத்துக்கொண்டார்" என கமலின் நடிப்பை புகழ்ந்தார். சிவாஜிகணேசனின் நாற்காலிக்கு ஆசைப்படும் கமல்ஹாசனே கலைத்தாயின் தோளில் வளர்ந்த பிள்ளை என்றால்.. சிவாஜிகணேசன் கலைத்தாயின் வயிற்றில் பிறந்த மூத்தபிள்ளை.

    வரலாற்று நாயகன்

    வரலாற்று நாயகன்

    கணேசன் என்ற இயற்பெயருடையவருக்கு சிவாஜி என்ற பெயரை வழங்கியவர் தந்தை பெரியார் தான். அறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் அவரின் நடிப்பை பார்த்து வியந்த பெரியார் சிவாஜி என்று அழைத்தார். அது பிற்காலங்களில் பெயரானது. சிவாஜி கணேசனின் நடிப்புக்கு இலக்கணமாக பல படங்களை சொல்லலாம். குறிப்பாக வரலாற்று நாயகர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், மகாகவி பாரதியார், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், போன்றவர்களை மக்களுக்கு திரைப்படம் மூலம் அடையாளம் காட்டியவரே சிவாஜி கணேசன் தான். அதேபோல், சிவபெருமான் என்றாலும் சிவாஜி கணேசனே நினைவுக்கு வருவார்.

    நடிப்பு

    நடிப்பு

    திரைப்படத்தில் வசனம் பேசுவது, உடல்மொழி என நடிப்பில் தூள் கிளப்பிய சிவாஜி கணேசன் அதே முக்கியத்துவத்தை பாடல்களுக்கும் கொடுத்தார். பாசலமலரில் தங்கை மீது பாசம் பொழியும் அண்ணன் பாடும் பாடலாக இருக்கட்டும், திருவிளையாடலில் விரகு வெட்டியாக பாத்தா பசுமரம் பாடலாக ஆகட்டும், வேதனையின் விளிம்பில் நிர்கதியாகப் பாடும் சட்டி சுட்டதடா பாடலாக இருக்கட்டும், வெட்டப்பட்ட மரம் துளிர்த்தெழும் உணர்வோடு ராதாவின் அன்பை மதிக்கும் பூங்காற்று திரும்புமா பாடலாகட்டும் இப்படி எல்லா பாடல்களிலுமே, பாடலைப் பாடிய டி.எம்.சௌந்தராஜனோ, மலேசியா வாசுதேவனோ வெளியே தெரியாமல் சிவாஜி கணேசனே தெரிந்தது அவர் சிறப்பு.

    வியப்பு

    வியப்பு

    பாடலுக்கு வாயசைக்கும் சிவாஜி கணேசனின் திறமையைக் கண்டு இளையராஜாவும் வியந்துள்ளார். சிவாஜிகணேசன் நடித்த கவரிமான் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அப்படத்தில் "ப்ரோவபாரமா.. என்ற ஒரு பாடல் வரும். பின்னணி பாடகர் யேசுதாஸ் பாடியிருப்பார். அந்த பாடலில் "ப்ரோவபாரமா...?" எனத் துவங்குவது தியாகராஜர் கீர்த்தனை. அந்த பாடலில்தான் முதன்முதலில் இளையராஜா தியாகராஜர் கீர்த்தனையை பயன்படுத்தினார். "ததரின..." என நீண்ட ராகத்தோடு துவங்கும். அதற்கு ஒரு கைதேர்ந்த கர்நாடக இசைப் பாடகர் போல வாயசைத்துக்கொண்டிருப்பார் சிவாஜி. அப்போது திடீரென "ப்ரோவபாரமா.." என பாடலின் பல்லவி ஆரம்பமாகும். அதற்கும் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் வாயசைவு கொடுத்திருப்பார் சிவாஜி. பொதுவாக அது பாடகர்களுக்கே பாடுவதற்கு கடினமானப் பகுதி எனச் சொவார்கள். அந்த பாடலை பதிவு செய்துகொடுத்துவிட்டு படப்பிடிப்பு முடிந்தபிறகு இந்த காட்சியைப் பார்த்த இளையராஜா எப்படி இவ்வளவு துல்லியமாக அவரால் வாயசைக்க முடிந்தது என வியந்துபோனாராம்.

    அடுத்த தலைமுறை

    அடுத்த தலைமுறை

    இப்படி நடிப்பின் எல்லா பரிமாணங்களையும் கடந்த சிவாஜிகணேசன், அடுத்த தலைமுறை நடிகர்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி அதிலும் செண்ட்சுரி அடித்தார். விஜய்யுடன் நடித்த ஒன்ஸ்மோர், கமலின் தேவர்மகன், ரஜினிகாந்தின் படையப்பா என எப்போதுமே நடிப்பின் சக்கரவர்த்தியாகவே வாழ்ந்தார் சிவாஜிகணேசன். இவரின் கலைச் சேவையை பாராட்டி பிரான்ஸ் அரசு, செவாலியே விருது வழங்கி கௌரவித்தது. இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும், கலை இருக்கும் வரையிலும், கலையை ரசிப்பவர்கள் இருக்கும் வரையிலும் சிவாஜி கொண்டாடப்பட்டுக்கொண்டேதான் இருப்பார். நடிகர்த் திலகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    English summary
    Nadigar thilagam Sivajiganesan 90th birthday today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X