»   »  டி.ஆர் என்னை அடிக்கல, அவருக்கு சாமி வந்திருச்சு..!

டி.ஆர் என்னை அடிக்கல, அவருக்கு சாமி வந்திருச்சு..!

Subscribe to Oneindia Tamil
Simbu with Vedika

காளை படத்தைப் பார்த்து கடுப்பாகி என்னை இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் அடிக்கவில்லை. மாறாக அவருக்கு சாமி அருள் வந்துவிட்டது. இதனால் அவர் நாக்கைக் கடித்துக் கொண்டு ஆடினார். அவ்வளவுதான் நடந்தது என்று, தான் அடி வாங்கியதாக வெளியான தகவலை படு 'நாசூக்காக' மறுத்துள்ளார் இயக்குநர் தருண் கோபி.

சிம்பு, வேதிகா நடிப்பில் தருண் கோபி இயக்கத்தில் வெளியான காளை சிம்பு ரசிகர்களை டென்ஷனில் ஆழ்த்தியுள்ளதாம். படத்தைப் பார்த்து விட்டு பல ரசிகர்கள் கடுப்புடன் தியேட்டர்களில் சத்தம் போடுவதாகவும் முன்பு செய்திகள் வெளியாகின.

இதைக் கேள்விப்பட்டு சிம்புவின் தந்தையான ராஜேந்தர் கமலா தியேட்டருக்குப் படம் பார்க்கப் போனாராம். படத்தைப் பார்த்து கடுப்பான அவர், அந்த நேரம் பார்த்து அங்கு வந்த இயக்குநர் தருண் கோபியை என் பையன் வாழ்க்கையை கெடுத்திட்டியே என்று ஆவேசமாக கூறியபடி அடித்து விட்டதாகவும் செய்திகள் வந்தன.

இதனால் திரையுலகிலும் பரபரப்பு நிலவியது. ஆனால் தருண் கோபி தன்னை ராஜேந்தர் அடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அப்ப என்னதான் நடந்தது என்று கேட்டதற்கு தருண் கோபி கொடுத்த விளக்கம் இதுதான் (சென்னையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த விளக்கத்தை அளித்தார் கோபி):

''கமலா தியேட்டரில் சிம்பு, அவரின் தந்தை ராஜேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர், நான் உட்பட பலர் காளை படத்தைப் பார்த்தோம்.

படம் முடிந்து கண்ணீர் ததும்ப வெளியே வந்த டி.ராஜேந்தர், சிம்புவின் தோளை தட்டிக் கொடுத்தார். பின்னர் எனது சட்டையைப் பிடித்து இறுக்கியவர், நாக்கை கடித்து ஆடத் தொடங்கினார்.

அவரின் செயலைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். இதைப் பார்த்த சிம்பு உட்பட அனைவரும் அந்த இடத்தை விட்டு தலைதெறிக்க ஓடி விட்டனர்.

அப்போது ராஜேந்தர் நான் யாருன்னு உனக்கு தெரியாதா என கேட்டவாறே, நாக்கைக் கடித்து என் சட்டையை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தார்.

அப்புறம்தான் தெரிந்தது, அவர் மீது கருப்பசாமி புகுந்து, அதனால் அருள் வந்து ஆடியிருக்கிறார் என்று. நான் படத்தில் கருப்பசாமியை அதிக காட்சிகளில் காட்டியிருந்தேன். அதனால்தான் அவருக்கு அருள் வந்து விட்டது போல.

மேலும், படத்தின் முதல் காட்சியில் கோவிலில் குண்டு வெடிப்பது போன்ற சண்டை காட்சி இருந்தது. இதற்கெல்லாம் நான் பரிகாரம் எதையும் செய்யவில்லை. இதனால்தான் அவருக்கு அருள் வந்து விட்டது.

அவர் உணர்ச்சிவசப்பட்டால் அருள் வந்து விடுமாம். அப்போதெல்லாம் இப்படித்தான் நடந்து கொள்வாராம். இதை ராஜேந்தரின் துணைவியார் உஷாவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

மற்றபடி அவர் படம் நன்றாக வந்திருக்கிறது என என்னை பாராட்டத்தான் செய்தார், அடிக்கவெல்லாம் செய்யவில்லை என்று கூறியுள்ளார் கோபி.

'அருளிலிருந்து' விலகி மெதுவாக காளை பட சர்ச்சைக்கு வந்த கோபி, படத்தின் காட்சி அமைப்பு குழப்பமாக இருப்பதாக பலரும் கூறினர். அதனால் எளிதில் புரியும் வகையில் படத்தின் காட்சிகள் மாற்றப்பட்டுள்ளது.

அத்தை, மருமகன் உறவை தவறாக சித்தரித்தத்தாக கூறி வழக்கறிஞர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெற்றோரை இழந்து அத்தையின் கவனிப்பில் வளரும் ஒருவன், தனக்கு வரப்போகும் மனைவி அத்தையைப் போல இருக்க வேண்டும் எனக் கூறுகிறான். அதே போல, தடையை மீறி வில்லனைப் பழிவாங்கச் சென்ற தனது மருமகனை திரும்ப அழைத்து வர வேண்டும் என அடியாட்களிடம் சங்கீதா கூறுகிறார்.

அப்போது அவர் எனக்கு எனது மருமகன் வேண்டும் எனக் கூறுகிறார். இதில் வேறு தவறான எந்தவிதமான வார்த்தைகளோ, காட்சிகளோ படத்தில் இல்லை. இதைத்தான் நாங்கள் நீதிமன்றத்தில் சொல்ல இருக்கிறோம் என்றார் கோபி.

எப்படியெல்லாம் உட்காந்து யோசிக்க வேண்டியிருக்கு!

கவிழ்த்திய காளை-கொந்தளித்த டி.ஆர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil