ஹீரோவா? வில்லனா?... ஹச்.வினோத்துடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி
சென்னை : 2014 ல் குறைந்த பட்ஜெட்டில் சதுரங்க வேட்டை படத்தை இயக்கி, டைரக்டராக அறிமுகமானவர் ஹச்.வினோத். முதல் படமே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருந்ததால் பெரிய அளவில் பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்ல வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவனிக்கப்படும் டைரக்டர் ஆனார் வினோத்.

அஜித்துடன் கூட்டணி
அடுத்த படத்திலேயே அஜித்தை வைத்து இயக்கியதால் வினோத்தின் திரையுலக வாழ்க்கை டாப்பிற்கு சென்றது. அஜித்தை வைத்து 2019 ல் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். இந்தியில் வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் என்றாலும் தமிழில் இந்த படம் செம ஹிட் ஆனது. இதனால் அஜித்துடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து வலிமை படத்தை இயக்கி உள்ளார்.

அதிகம் எதிர்பார்க்கப்படும் வலிமை
ரசிகர்களால் மட்டுமல்ல இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் படமாகவும் வலிமை மாறி உள்ளது. படம் ரிலீசாவதற்கு முன்பே இந்த படம் பல சாதனைகளை படைத்துள்ளது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் முன்பே ஆன்லைனில் டிக்கெட்கள் புக் ஆகி விட்டன.

கால்ஷீட் கொடுத்த அஜித்
வினோத் படம் இயக்கும் விதம் அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டதால் மீண்டும் அவர் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித். வலிமையை தொடர்ந்து தல 61 படமும் இவர்கள் கூட்டணியில் தான் அமைய உள்ளது.

விஜய் சேதுபதிக்கு கதை ரெடி
லேட்டஸ்ட் தகவலாக, வினோத் மற்றொரு கதையையும் தயார் செய்து முடித்து விட்டாராம். சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். புதிய வருடத்தில் வினோத் - விஜய் சேதுபதி படம் உறுதியாகும் என கூறப்படுகிறது. இதுவும் மற்றொரு ஹிட் படமாக இருக்கும் என கோலிவுட்டில் இப்போதே பேசப்படுகிறது.

எந்த படத்திற்கான கதை
அதே சமயம் வினோத், விஜய் சேதுபதியிடம் கதை சொன்னது எந்த படத்திற்கானது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வினோத் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க போகிறாரா அல்லது தல 61 படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க கதை சொல்லி உள்ளாரா எனவும் சிலர் கேட்க துவங்கி உள்ளனர்.

அஜித்திற்கு வில்லனா
ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி,தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்கள். ரஜினியுடன் பேட்ட படத்தில் வில்லத்தனமான கேரக்டரில் நடித்து விட்டார். அதனால் அடுத்தபடியாக அஜித்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











