twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சூரியின் திரை வாழ்க்கையை மாற்றிய.. அட்டகாசமான 5 திரைப்படங்கள் !

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்.

    Recommended Video

    மாற்றுத்திறனாளி & திருநங்கைகளுக்கு உதவிய சூரி | Actor Soori

    படப்பிடிப்பு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று வாய்ப்புக் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்த சூரி தீபாவளி, பீமா, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் ஓரிரு காட்சிகளில் வந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

    அவ்வாறு கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்ட சூரி இன்று தமிழ் சினிமாவில் மிக அதிகமான ரசிகர்களை கொண்டு முன்னணி நகைச்சுவை நடிகராக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வாறு சூரியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த அட்டகாசமான 5 திரைப்படங்களை நாம் இங்கு காண்போம்.

    பரோட்டா சூரி

    பரோட்டா சூரி

    வெண்ணிலா கபடி குழு திரைப்படம் சூரிக்கு மட்டுமல்லாமல் இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன், கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணுவிஷால் மற்றும் விஜய் சேதுபதி என பலருக்கும் இத்திரைப்படம் மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. மேலும் பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் "பரோட்டா சூரி" கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில் சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான "பரோட்டா காமெடி" இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இவ்வாறு சூரியின் திரைவாழ்க்கையில் முதல் திருப்புமுனை அமைந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.

    திகட்டாத காமெடி

    திகட்டாத காமெடி

    மனம் கொத்தி பறவை திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாம் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் சூரியின் திரை வாழ்க்கையில் இத்திரைப்படம் மற்றுமொரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. புதுமுக இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக இருந்த நிலையில் இதுவரை பலரும் கண்டிராத வகையில் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் காமெடி அட்டகாசமாக இதில் ஒர்க்கவுட் ஆகியிருக்கும். கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டிருந்த இந்த திரைப்படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சங்கத்தை நடத்தி வரும் தலைவராக சிவகார்த்திகேயனும், செயலாளராக சூரியும் அடிக்கும் லூட்டி அப்பப்பா இன்று வரை திகட்டாத காமெடி அமிர்தமாய் பலரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து வருகிறது.

    தாமரையின் மாமனாக

    தாமரையின் மாமனாக

    வழக்கமாக இயக்குனர் எழிலின் திரைப்படங்களில் காமெடிக்கு எப்பொழுதுமே பஞ்சமிருக்காது. அந்த வகையில் இயக்குனர் எழிலின் இயக்கத்தில் உருவான தேசிங்கு ராஜா திரைப்படத்தில் கதாநாயகியின் மாமனாக முரட்டு மீசையுடன் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரியின் அட்டகாசமான காமெடி காட்சிகள் பலரையும் சிரிக்க வைத்ததோடு இன்று வரை புகழப்பட்டு வருகிறது. சூரி மற்றும் ரவிமரியா என இருவரும் கதாநாயகி தாமரை கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிந்து மாதவிக்கு விஷத்தை கொடுக்க முற்படும் காமெடி காட்சிகள் பலரையும் பலே பலே என சொல்ல வைத்ததோடு அந்த காமெடிகள் இன்றுவரை பலரையும் மகிழ்வித்து வருகிறது.

    தோத்தாத்திரி

    தோத்தாத்திரி

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படக்குழு அப்படியே மீண்டும் இணைந்த திரைப்படம் ரஜினிமுருகன். பினான்சியல் பிரச்சனையால் சற்று தாமதமாக வெளியிடப்பட்ட ரஜினிமுருகன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்ததைப்போல் ரசிகர்களை மிகவும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவகார்த்திகேயன் சூரி காமெடி கூட்டணி ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் பிரபலமாக பேசப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினி முருகன், தோத்தாத்திரி என இரண்டு கதாபாத்திரங்களில் அள்ள அள்ள குறையாத நகைச்சுவை காட்சிகளில் இருவரும் பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள். இந்த திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிகளுக்காகவே இத்திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. மேலும் தொலைக்காட்சிகளில் இப்படம் எப்போதெல்லாம் ஒளிபரப்பப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் டிஆர்பியிலும் நம்பர்-1 ஆக தொடர்ந்து இருந்து வருகிறது.

    புஷ்பா புருஷன்

    புஷ்பா புருஷன்

    தமிழ் ரசிகர்களிடையே இன்றளவும் மிகப் பிரபலமாக பேச்சுவழக்கில் இருக்கின்ற ஒரு பெயர் என்றால் அது புஷ்பா புருஷன். இயக்குனர் எழில் இயக்கத்தில் மீண்டும் இணைந்து நடித்திருந்த சூரி இத்திரைப்படத்தில் சக்கரை என்ற கதாபாத்திரத்தில் பிரமாதமான காமெடிகளோடு தூள் கிளப்பி இருப்பார். குறிப்பாக படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்துடன் சூரி செய்த குறும்பான கல்யாணத்தை தொடர்ந்து பலராலும் "புஷ்பா புருஷன்" என அழைப்பது ரசிகர்களிடையே கண்ணீர் மல்க சிரிப்பை வரவைத்தது மட்டுமல்லாமல், இத்திரைப்படம் காமெடிக்காகவே பல நாட்கள் திரையில் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவ்வாறு சூரி தனது திரைவாழ்க்கையில் படிப்படியாக பல தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்து ரசிகர்களை மகிழ்வித்து தனது எதார்த்தமான காமெடி காட்சிகளின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்து இன்றளவும் இவ்வரின் பெயரை சொல்லும் வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    English summary
    5 Best Movies by Actor Soori
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X