ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர்… பிரபாஸ் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆதிபுருஷ் டீம்
ஐதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.
ஆதிபுருஷ் டீசர் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நிலையில், தற்போது புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ஆதிபுருஷ் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராமர் அவதாரத்தில் பிரபாஸ்
ராதே ஷ்யாம் படத்தைத் தொடர்ந்து 'சலார்', ப்ராஜக்ட் கே' படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இதனிடையே ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். ராமாயணத்தை பின்னணியாக வைத்து 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், பிரபாஸ் ராமர் பாத்திரத்தில் நடித்துள்ளார். கிருத்தி சனோன் சீதையாகவும், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராவணன் கேரக்டரிலும் நடித்துள்ளனர். இந்நிலையில், அக்டோபர் 2ம் தேதி ஆதிபுருஷ் டீசரை படக்குழு வெளியிட்டது.

இயக்குநருக்கு கார்
ஆதிபுருஷ் டீசர் வெளியாது முதலே பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டது. மேக்கிங், கிராஃபிக்ஸ், ராவணனாக சைஃப் அலிகான் என பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. சினிமா ரசிகர்கள் ஒருபக்கமும், ராமரின் பக்தர்கள் மறுபக்கமும் ஆதிபுருஷ் படத்தை வறுத்தெடுத்து வந்தனர். ஆனால், இதையெல்லாம் பிரபாஸ், இயக்குநர் ஓம் ராவத் உள்ளிட்ட படக்குழுவினர் சைலண்டாக டீல் செய்தனர். இதனிடையே விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் ஓம் ரவத்துக்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசளித்து தயாரிப்பு நிறுவனம் சர்ப்ரைஸ் கொடுத்தது.

பிரபாஸ் 43வது பிறந்தநாள்
இந்நிலையில், இன்று (அக் 23) தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் பிரபாஸுக்கு, ஆதிபுருஷ் டீம் அசத்தலாக வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆதிபுருஷ் படத்தில் இருந்து பிரபாஸின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதில் ரிலீஸ் தேதியையும் உறுதி செய்துள்ளது. ராமர் அவதாரம் எடுத்துவரும் பிரபாஸின் இந்த போஸ்டரில், ஆதிபுருஷ் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படம் 3 டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து
பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ராமாயணத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரபாஸை போற்றும் வகையில், அவர் ராமராக தோன்றும் ஆதிபுருஷ் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது குறுப்பிடத்தக்கது. மேலும், பிரபாஸ் ரசிகர்கள் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











