தளபதி 67ல ரோலக்ஸ் வரது கன்ஃபார்ம் தான் போல.. சூர்யாவை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசியதாக தகவல்!
சென்னை: கோலிவுட்டில் ஒரு குட்டி யூனிவர்ஸையே கைதி, விக்ரம் படங்களின் மூலம் ஆரம்பித்து வைத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
விஜய்யை வைத்து அவர் அடுத்து இயக்கப் போகும் படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் தான் என்பதை மறைமுகமாக சில பேட்டிகளில் அவரே கூறி உள்ளார்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரோலக்ஸ்
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் கடைசி 3 நிமிடங்கள் கேமியோவாக வந்து ஒட்டுமொத்த தியேட்டரையே தனது அசுரத்தனமான நடிப்பால் திணறவிட்டார் சூர்யா. நடிப்பின் நாயகனை அப்படி பார்த்ததுமே அவரது ரசிகர்கள் தனி படமாக ரோலக்ஸ் படத்தை எடுக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும், கைதி 2, விக்ரம் 3 உள்ளிட்ட படங்களிலும் ரோலக்ஸ் கதாபாத்திரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரும்புக்கை மாயாவி
கைதி படத்தையே கார்த்திக்கு முன்னதாக சூர்யாவை வைத்து இயக்கத்தான் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அது சாத்தியமாகவில்லை. மேலும், சூர்யாவுக்கென்றே பிரத்யேகமாக இரும்புக்கை மாயாவி எனும் படத்தின் கதையையும் தயார் செய்து வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் படம்
விக்ரம் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய்யுடன் இணைந்து தளபதி 67 படத்தை ஜனவரி முதல் இயக்கப்போகிறார் லோகேஷ் கனகராஜ் என்பது 100 சதவீதம் உறுதியாகி விட்டது. அதற்கான லொகேஷன் தேடுதல்களிலும் அவர் இறங்கி உள்ளார். மூணாறு எனும் இடத்தில் தளபதி 67 படத்தின் காட்சிகல் படமாக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம்.

சூர்யாவுடன் சந்திப்பு
இந்நிலையில், பெங்களூருவில் நடிகர் சூர்யாவை சந்தித்து திடீரென லோகேஷ் கனகராஜ் சில மணி நேரங்கள் பேசி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில், இப்போ ஏன் சூர்யாவை சந்தித்து மணிக்கணக்கில் லோகேஷ் பேசினார் என்கிற கேள்வியும் தளபதி 67 படத்தில் சூர்யாவும் நடிக்கப் போகிறாரா என்கிற யூகங்களும் கிளம்பி உள்ளன.

மீண்டும் நேருக்கு நேர்
நேருக்கு நேர் படத்தில் விஜய் சூர்யா இணைந்து நடித்த நிலையில், தளபதி 67 படத்திலும் இருவரும் நேருக்கு நேர் மோத உள்ளனர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்றே தெரிகிறது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்த நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக சூர்யா ரோலக்ஸ் வருவாரா? இல்லை இருவருமே கேங்ஸ்டர்களாக களமிறங்க போகின்றனரா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. விரைவில் லோகேஷ் கனகராஜ் ஹாட் அப்டேட் உடன் வந்து தெறிக்கவிடப் போவது உறுதி.


Click it and Unblock the Notifications











